வேலூர் ஐடி ஊழியர் சுட்ட 36 பவுன்.. பழைய தங்கத்தில் நகை வாங்கி மனைவிக்கு சூட்டி.. தம்பதி கைது எப்படி

  • வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியையின் வீட்டில் 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, சித்தூரில் குடும்பத்துடன் சொகுசாக வாழ்ந்துவந்த தம்பதி, போலீஸாரின் தொடர் விசாரணையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் யார்? எப்படி திருட முயன்றார்கள்? போலீசாரிடம் எப்படி சிக்கினார்கள்? என்பது குறித்தெல்லாம் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    Advertisement

    வேலூர் தம்பதி

    இரவு 2 பேரும் வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. லாக்கரில் வைத்திருந்த 36 பவுன் தங்க நகைகளும் மாயமாகியிருந்தன.

    இதுகுறித்து மரியா காட்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். கொள்ளை நடந்த நேரத்தில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து, அவர்களின் பின்னணியையும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினார்கள்.

    Advertisement

    36 சவரன் தங்க நகைகள் திருட்டு

    அந்த விசாரணையில் போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முத்துவேல் கார்த்திக் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, ஓய்வுபெற்ற ஆசிரியையின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.. அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் அவரது திருட்டு வாழ்க்கையின் முழு பின்னணியும் வெளிச்சத்துக்கு வந்தது.

    முத்துவேல் கார்த்திக் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. இவரது மனைவி பெய்ர பிரபாவதி.. இவர்களுக்கு திருட்டுதான் முக்கிய தொழில்.. விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்கெனவே பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் முத்துவேல் கார்த்திக் மீது உள்ளது.. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக போலீஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்திருக்கிறார்.

    Advertisement

    பழைய நகைகளை புது நகை

    உள்ளூரில் தொடர்ந்து திருடுவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், வடமாவட்டங்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுவாராம்.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. அந்த குழந்தைகளையும் தங்களோடு அழைத்து சென்றுவிடுவார்கள்.. அந்தந்த பகுதிகளில் வீட்டை எடுத்து தங்கி, சுற்றுவட்டாரத்தில் இந்த தம்பதி கொள்ளை அடிப்பார்களாம். பிறகு வேறு பகுதிக்கு குடிபெயர்வார்கள்..

    தற்சமயம், ஆந்திர மாநிலம் சித்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி பிரபாவதி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார் முத்துவேல் கார்த்திக்.. தன்னை ஐ.டி. ஊழியர் என்று கூறிக்கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் பழகியுள்ளார்.

    காட்பாடி ஐடி ஊழியர்

    சித்தூரில் இருந்துக்கொண்டே, அடிக்கடி காட்பாடி, வேலூர் பகுதிகளுக்கு வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, சந்தர்ப்பம் கிடைத்ததும் திருடுவது இவர்களது வழக்கமாக இருந்துள்ளது.. திருடிய நகைகளை அரக்கோணம், திருத்தணி பகுதிகளில் மனைவியுடன் ஜோடியாகச் சென்று அடகு வைப்பது அல்லது விற்பனை செய்வது என இருவரும் செயல்பட்டுள்ளனர்.

    Advertisement

    இதில் கிடைத்த பணத்தில் புதிய நகைகளை வாங்கி மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்பாராம் முத்துவேல் கார்த்திக்.. அப்படித்தான், ஓய்வுபெற்ற ஆசிரியையின் வீட்டிலும் நகையை திருடி, அதில் ஒரு பகுதியை விற்று ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய காரையும் வாங்கியிருக்கிறார்கள்.

    புதிய காரில் உலா

    இதுதான் போலீஸாரின் விசாரணையில் முக்கிய ட்விஸ்ட்டாக அமைந்தது.. திருடிய பிறகு புதிய காரில் குடும்பத்துடன் இவர்கள் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர்.. அதேபோல முத்துவேல் கார்த்திக், காட்பாடி சித்தூர் பஸ் ஸ்டாண்டு அருகே வந்து டாஸ்மாக் கடையில் பீர் வாங்கிக் குடித்துவிட்டு, அடுத்ததாக எந்த வீட்டில் கைவரிசை காட்டலாம் என நோட்டமிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இப்படி மீண்டும் திருடுவதற்கான திட்டத்தில் இருந்தபோதுதான் போலீஸாரின் விசாரணை வலையில் முத்துவேல் கார்த்திக் தம்பதி சிக்கிவிட்டார்கள்.. இப்போது இவர்களிடமிருந்து இருந்து சுமார் 26 பவுன் நகைகளையும், புதிய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி பிரபாவதியும் கைது செய்யப்பட்டார்.

    தம்பதி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்த போலீஸார், அவர்களின் 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு விருதுநகரில் உள்ள தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்க அனுப்பி வைத்துள்ளனர்.. 36 பவுன் நகை கொள்ளை வழக்கில் தொடங்கிய விசாரணை, குடும்பத்தையே மறைமுகமாக பயன்படுத்தி தொடர்ந்து திருடி வந்த தம்பதியின் முழு பின்னணியையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.

    English Summary

    Vellore IT Employee Stole 36 Sovereigns.. Bought New Gold from Old Jewellery for His Wife.. How Did the Couple Get Caught?