வேலூரில் பச்சிலை மூலிகைச் சாறு ஊற்றிய ரமாதேவி.. ஐயோ, இலவச கண் சிகிச்சை முகாமில் நடந்தது என்ன?

  • வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று நடந்துள்ளது.. அங்கு நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது.. இந்த முகாமுக்கு சென்ற ரமாதேவி ஏன் இறந்தார்? என்று தெரியவில்லை.. ஆனால் அவரது குடும்பத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.. இந்த மரணம் குறித்த போலீஸ் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ளது குடிபல்லி கிராமம்.. இங்கு இயங்கி வரும் சென்னராயசுவாமி கோயில் வளாகத்தில், "ஆஞ்சநேயா ஜனசேவா அறக்கட்டளை" என்ற அமைப்பின் சார்பில் மாதம்தோறும் 11ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

    Advertisement

    இந்த முகாமில் வழங்கப்படும் அபூர்வ சித்த வைத்திய மூலிகை சாற்றைக் கண்ணில் விட்டால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, புரை மற்றும் சதை வளர்ச்சி போன்ற கண் கோளாறுகள் மொத்தமாக குணமாகும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் இலவச கண் சிகிச்சை முகாம்

    அதுமட்டுமன்றி, பெண்களின் மாதவிடாய் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கும் இது தீர்வளிக்கும் என்றும், 5 வயது முதல் 100 வயதுடைய எல்லாருக்குமே எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.. அதேபோல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் இந்த மூலிகைச் சாறு குறித்த விளம்பரங்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன.. அதனை உண்மை என நம்பி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

    Advertisement

    அந்தவகையில்,ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மனைவி ரமாதேவி (45) என்பவரும் இந்த முகாமிற்குச் சென்றுள்ளார். ஏற்கெனவே கண் பார்வை குறைபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த ரமாதேவி, இன்ஸ்டா விளம்பரங்களை பார்த்துள்ளார்..

    பச்சிலை மூலிகைச் சாறு

    பிறகு தன்னுடைய சகோதரி ஸ்ரீதேவி மற்றும் கிராமத்தைச் சேர்ந்த 20 பேருடன் இந்த முகாமிற்கு சென்றுள்ளார். மதிய வேளையில் நீண்ட வரிசையில் காத்திருந்த அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது.. அப்போதுகூட, வரிசையிலேயே காத்திருந்தார்.. பிறகு 100 ரூபாய் கட்டணத்தில் டோக்கன் பெற்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 கண்களிலும் அந்த மூலிகைச் சாற்றை விட்டுக்கொண்டுள்ளார்.

    Advertisement

    மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை 3.30 மணியளவில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கோட்டைச்சேரி கிராமத்தின் அருகே ரமாதேவி திடீரென மயங்கி விழுந்தார்.

    சுருண்டு விழுந்த ரமாதேவி

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாகப பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், முகாமில் போடப்பட்ட அடையாளம் தெரியாத பச்சிலை மூலிகை மருந்துதான் அவரது உயிரிழப்பிற்குக் காரணம் என்று சொல்லி, பேரணாம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் உடனடியாக புகார் தந்தார்கள்.

    இயற்கைக்கு மாறான மரணம்

    புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடமான சென்னராயசுவாமி கோயிலுக்கு சென்று மூலிகை சிகிச்சை முகாமை உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணையை தொடங்கினர்.

    Advertisement

    ரமாதேவியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து "இயற்கைக்கு மாறான மரணம்" என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறிவியல் ரீதியான சான்றுகளோ அல்லது தகுந்த மருத்துவ அனுமதியோ இல்லாமல் வெறும் சோஷியல் மீடியா விளம்பரங்களை மட்டும் நம்பிச் செல்லும் பொதுமக்கள், தங்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற போலி சிகிச்சை முகாம்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்..

    ஆனால் உண்மையிலேயே ரமாதேவி எப்படி இறந்தார்? எதனால் இறந்தார் என்று தெரியவில்லை.. போலீசார்தான் இதுதொடர்பான உண்மையை வெளிக்கொணர வேண்டும்.. எனினும் ரமாதேவியின் மரணம், அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Vellore Ramadevi.. Herbal Juice at Free Eye Camp, What Happened to Her After That?