வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், டெலிவரி ஊழியரிடம் கொடுக்கப்பட்ட இரண்டு 500 ரூபாய் நோட்டுகளால் ஒரு கள்ளநோட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து 5 பேர் சிக்கியுள்ளனர். உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த பணமும், இந்தக் கும்பலின் பின்னணியில் வெளியான தகவல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரஃபிக் (48). இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் பொருட்களை கொண்டு வந்த டெலிவரி ஊழியரிடம் ரூ.500 மதிப்புள்ள இரண்டு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். அந்த நோட்டுகளைப் பார்த்த டெலிவரி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ரஃபிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான உணவகத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து ரஃபிக் அளித்த தகவலின்பேரில், அவருக்கு கள்ள நோட்டுகள் கிடைத்த வழித்தடம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குடியாத்தம் தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிபேர் அகமது என்பவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், டி.டி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால் ஆகியோரிடம் தலா ரூ.25,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான பாபுவிடம் இருந்து ரூ.30,000 மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் உளவுத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலும் போலீஸ் விசாரணைக்கு உதவியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்டு, உள்ளூர் பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே பாபு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் கள்ள நோட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தொடர்புகள் மூலமாகவே மீண்டும் கள்ள நோட்டுகளைப் பெற்று வந்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ரஃபிக், ஜிபேர் அகமது, காமராஜ், கோபால், பாபு ஆகிய 5 பேரையும் குடியாத்தம் நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து இந்த கள்ள நோட்டுகளை விநியோகம் செய்தவர்கள் யார்? வேறு யாருக்கெல்லாம் இந்த நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெலிவரி ஊழியரிடம் கொடுக்கப்பட்ட இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது 5 பேர் கைது செய்யப்படும் அளவுக்கு விரிவடைந்துள்ளது.டெலிவரி ஊழியருக்கு வந்த சந்தேகம்
உணவகத்தில் சிக்கிய ரூ.50,000
மேற்கு வங்கத்துடன் தொடர்பு
5 பேர் கைது