வாணியம்பாடியில் மனைவியின் ஆபரேஷனுக்கு 40000 கடன்.. 51 லட்சம் கட்ட சொல்லி நோட்டீஸ்

  • திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜிஎஸ்டி மோசடி தொடருகிறது ‌ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.வாணியம்பாடியில் மனைவியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வங்கியில் பெற்ற கடன் தொகை முடக்கப்பட்டுள்ளது. ரூ.53.81 லட்சம் ஜிஎஸ்டி பாக்கி என நோட்டீஸ் வந்ததால் குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

    Advertisement

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் நரி அப்துல் வஹாப் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா. கூலித்தொழிலாளியான இவருக்கு பர்வீன் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாதம் ரூ.2,500 வாடகையில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், பர்வீன் கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காகப் பல்வேறு இடங்களில் கடன் கேட்ட நூருல்லா, இறுதியாக ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.51,000 கடன் பெற்றுள்ளார். இதில் ரூ.9,000-ஐ குடும்பச் செலவிற்காக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ.40,000-ஐ மருத்துவச் செலவுக்காக மனைவியின் வங்கிக் கணக்கில் வைத்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி மருத்துவச் செலவிற்காக வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றபோது, அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    Advertisement

    இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தமிழ்நாடு வணிகவரித் துறையின் ஓசூர் உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து ஜி.எஸ்டி. நோட்டீஸ் ஒன்று வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

    அந்த நோட்டீஸில், பர்வீனின் பேன் (PAN) கார்டு மற்றும் ஆதார் எண்களைப் பயன்படுத்தி 'பிவி எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில் போலியாக நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2021-22-ஆம் நிதியாண்டிற்கான வரி, வட்டி மற்றும் அபராதமாக ரூ.53,81,710 செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தாங்கள் செய்யாத தொழில் மற்றும் பரிவர்த்தனைகளுக்காக, தங்களது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகைக்கு ஜிஎஸ்டி பாக்கி எனக் கூறியிருப்பது அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    மனைவியின் அவசர இருதய அறுவை சிகிச்சைக்காகக் கடன் வாங்கி வைத்திருந்த ரூ.40,000-மும் தற்போது முடக்கப்பட்டுள்ளதால், மேல்சிகிச்சை செய்ய வழியின்றி அந்த ஏழை குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் தவித்து வருகின்றனர்.

    English Summary

    Medical Emergency Derailed: Bank Account Frozen with ₹53.81 Lakh GST Fine for Impoverished Family in tirupathur.