விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செஞ்சி சிறுமியை தொடர்ந்து 10-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போயிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம் பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வரும் வடிவேலு - பவானி தம்பதியின் 2-வது மகள் 7 வயது சிறுமி. கடந்த 12 ஆம் தேதி அதிகாலை மாயமானாள். முந்தைய நாள் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிய சிறுமியை மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றொர், அவளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். சிறுமியை கண்டுபிடிக்க முடியாததால் காவல்துறையில் புகார் அளித்த்தனர். இதையடுத்து போலீசார், சிறுமி ஹேமாவதியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியானது தொடர்ந்து 10-வது நாளாக நடந்து வருகிறது. அந்த பகுதியில் செல்போன் சிக்னல்களில் பதிவான எண்கள் உள்ளிடவற்றை வைத்து 600 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. செஞ்சி சிறுமியை 10 வது நாளாக போலீசார் தேடி வரும் நிலையில் இதுவரை எந்த தடயமும் இல்லாமல் போலீசார் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.