விழுப்புரம்: 15 கோடி இருந்தால் சீட்டு தருவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார் எனவும், தேர்தலின் போது பொதுச் செயலாளரலால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒரு ரூபாய் கூட கிள்ளி போடவில்லை என பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளருமான அர்ஜுனன்.
சிவி சண்முகத்தின் ஆதரவாளரும் முன்னாள் திண்டிவனம் எம்எல்ஏவுமான அர்ஜுனன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், வானூர், விழுப்புரத்தில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு சிவி சண்முகம் தான் காரணம் என பசுபதி கூறுகிறார்.
அவர் தேர்தல் நேரத்தில் எங்கிருந்தார். தேர்தலில் திமுக வேட்பாளர் உடன் சேர்ந்து அதிமுக வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தார். 15 கோடி இருந்தால் சீட்டு தருவேன் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நாங்கள் எல்லாம் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இலவு காத்த கிளி போல காத்திருந்தது தான் மிச்சம். பொது செயலாளரலால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஒரு ரூபாய் கூட கிள்ளி போடவில்லை. கட்சி உதவி செய்திருந்தால் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அம்மா இருக்கும் போது தேர்தலில், பின்தங்கிய வேட்பாளருக்கு உதவி செய்தார். நாங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் கட்சி தலைமை தான். தோல்விக்கு காரணமானர்களுக்கு எல்லாம் கட்சியில் இன்று பொறுப்பு வழங்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சிவி சண்முகம் தான் 2026 தமிழக சட்டசபைத் தோல்விக்கு காரணம் என அவதூறு பரப்ப கூடாது. இத்துடன் அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்காக உழைத்தவர் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கி விட்டனர். தோல்விக்கு காரணம் கட்சி தலைமை மற்றும் பதவிக்காக உடன் இருப்பவர்கள் தான்" என்றார். அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அவர்கள் மீதும் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். இவர் சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவியை பறித்தார். இந்த நிலையில் இதுவரை தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார் சி.வி சண்முகம். இதற்கிடையே சிவிஎஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பொறுமை காத்து வருகிறார். இந்நிலையில் தான் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. சிவி சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 முக்கிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகித்து வந்த அப்பொறுப்பிலிருந்து நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.அர்ஜுனன்
சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி
தமிழக வெற்றி கழகம்
விழுப்புரம் மாவட்டம்