விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் உள்ள இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இந்த வீடுகளை இடிக்க நீதிமன்ற உத்தரவுப்படி ஜேசிபி இயந்திரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அதிகாரிகளின் காலில் விழுந்து வீடுகளை இடிக்க வேண்டாம் என கூறினார்கள். இதனால் 10 நாட்கள் அவகாசம் அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் இந்திரா காந்தி நகர் பகுதியில், கடந்த 1985-ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 36 குடும்பங்களுக்கு இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த வீடுகளில் இப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.
இங்கு வசித்து வரும் பொதுமக்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை முறையாகச் செலுத்தி வருவதோடு, மின் இணைப்பும் பெற்று அதற்கான கட்டணத்தையும் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். மேலும், தாங்கள் வசிக்கும் இந்த இடத்திற்குப் பட்டா வழங்கக் கோரி, நீண்ட நாட்களாகப் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை அளித்துள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியொரு சூழலில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அரசின் சார்பில் இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள இந்த இடம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் மானிய நிலம் என்றும், அங்குள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கோயில் மானிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு முறையான முன்னறிவிப்பு (நோட்டீஸ்) ஏதும் வழங்கப்படாமல், வீடுகளை இடிப்பதற்காக ஜேசிபி (JCB) இயந்திரத்துடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொடர்ந்து, வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் அதிகாரிகள் வருவதைப் பார்த்த பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனப் பலரும் தங்களது வீடுகளை இடிக்க வேண்டாம் எனக் கூறி கதறி அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது. இதையடுத்து, காவல்துறையினரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு மாற்று இடம் ஏதும் வழங்காமல் வீடுகளை இடிக்க வருவது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக, 10 நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வீடுகளை அகற்றிட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பேட்டியில், "அரசின் சார்பில் எங்களுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த இடம் கோயில் மானிய இடம் எனக் கூறி, வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்ததால் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். நாங்கள் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். இப்போது எங்கள் வீடுகளை இடித்து அகற்றினால் நாங்கள் எங்கு போவது? நிலத்தின் வகைப்பாடு 'நத்தம் புறம்போக்கு' என்றுதான் உள்ளது. நாங்கள் பலமுறை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு இதே இடத்தில் பட்டா வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.