விழுப்புரம்: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் பெண் நிர்வாகிகளை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும், அதிமுகவில் உழைக்கும் பெண்களை அவமானப்படுத்துபவர்களை கட்சித் தலைமையான எடப்பாடி பழனிசாமியே ஊக்குவிப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம். மேலும், பெண்களுக்கு எதிரான அவதூறு பரப்பப்படுவதை எதிர்க்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளராக தலைமை ஏற்று நடத்திய அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோற்றது.
இதனையடுத்து, சட்டசபையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவி சண்முகம், எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆதரவாக வாக்களித்தனர். போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். தற்போது வரை அவர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்கள் அந்தந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதும், கட்சியின் அலுவலக சாவியை எடப்பாடியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரான பசுபதி தரப்பிடம் ஒப்படைத்தார் சண்முகம். அதற்கு பிறகு அடிக்கடி தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் . இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை நேரில் சந்தித்து இன்று காலை புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னையும் தனது ஆதரவாளர்களையும் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செஞ்சி, மைலம் ,விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை குறிவைத்து அரசியல் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகவும், அதிமுகவில் உழைக்கும் பெண்களை அவமானப்படுத்துபவர்களை கட்சித் தலைமையே ஊக்குவிப்பதாகவும் அவர் விமர்சித்தார். பெண்களுக்கு எதிரான அவதூறு பரப்பப்படுவதை எதிர்க்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் கூறினார். நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வந்தாலும், அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், காவல்துறை தங்களை திருத்திக் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். செஞ்சி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக பெயர் குறிப்பிட்டு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த பதில் ஏமாற்றமளிப்பதாகவும் சி.வி. சண்முகம் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனக்கு தெரியும் என்றும் அவர் எச்சரித்தார்.எடப்பாடி பழனிசாமி
சி.வி. சண்முகம்
பசுபதி
பெண்கள் குறித்து அவதூறு
முதலமைச்சர் விஜய்
சட்டப்படி நடவடிக்கை