விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் அளவுக்கு அதிகமான பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதிகார மோதல், இப்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஏற்கனவே சிவி சண்முகம் நடவடிக்கையால் கடுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று அடுத்த அதிரடியை காட்டியிருக்கிறார். இதனால் சிவி சண்முகம் தரப்பு அடுத்து என்ன நடவடிக்கையை எடுக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அதிமுகவின் மிக முக்கியமான சக்தியாக இருந்த சி.வி.சண்முகம், இன்று கட்சியின் பொதுச்செயலாளருடனான கருத்து வேறுபாட்டால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இது விழுப்புரம் பகுதியில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதிக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், கடந்த 9-ம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கைகலப்பாக மாறியது. அதிலும் 2 தரப்பினரும் மாறி மாறி கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது, விழுப்புரம் அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலைக் கட்டுப்படுத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பும் களமிறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் ஆனந்தி, வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், பாஸ்கரன், எழில்ராஜன், விஜயன் உள்ளிட்ட 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக தலைமை இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதிமுகவில் ஏற்கனவே பல அதிருப்திக் குரல்கள் எழுந்து வரும் சூழலில், இத்தகைய நீக்க நடவடிக்கை கட்சியின் உள்ளூர் அரசியலில் மேலும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.. இதெல்லாம் பார்த்தால், தலைமையுடன் சமரசம் செய்துகொள்ளும் எண்ணம் சி.வி.சண்முகத்திற்கு கொஞ்சமும் இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை, சி.வி.சண்முகத்தை எந்த திசையில் அழைத்துச் செல்லும் என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எடப்பாடியுடன் இணக்கமாகச் செயல்பட்டு வரும் சூழலில், சி.வி.சண்முகம் மட்டும் ஒதுங்கி நிற்கிறார்.. தனிப்பாதையை தேர்வு செய்ய போவதாகவும் சொல்கிறார்கள்.. அப்படி அவர் தேர்வு செய்தால், அது எடப்பாடி பழனிசாமிக்குத் தனிப்பட்ட சவாலாகவே அமையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். காரணம், விழுப்புரம் மாவட்டம் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், அவர் வெளியேறுவது கட்சியின் கட்டமைப்பில் பெரிய ஓட்டையை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனி சிவி சண்முகம் என்ன முடிவெடுக்க போகிறார்? எடப்பாடியுடன் மோதல் முற்ற தொடங்கியதுமே, சிவி சண்முகம் தவெகவில் இணைய போவதாக செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.. இப்படியொரு கிசுகிசுவுக்கு சண்முகம் தரப்பில் மறுப்பும் சொல்லப்படவில்லை.. திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில், ஆதரவாளர்களுடன் சி.வி.சண்முகம் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சமீபத்தில் ஆலோசனைக்கு வந்தவர்களின் வாகனங்களில் தவெக கொடி பொருத்தப்பட்டிருந்ததுதான். அப்படியானால் சிவி சண்முகம் & கோ-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தவெகவுடன் தானோ என்ற சந்தேகமும் வலுத்தபடியே உள்ளது.. அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரிசையாக தவெக பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், சி.வி.சண்முகமும் அந்தப் பாதையையே தேர்வு செய்யப் போவதாகப் பேசப்படுகிறது. சி.வி.சண்முகம் மட்டும் தனியாக செல்லாமல், சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ், திருத்தணி எம்.எல்.ஏ ஹரி, புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் என மேலும் சிலரையும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.. கட்சியின் மாநில அளவிலான பொறுப்பு அல்லது முக்கியமான அந்தஸ்தை முன்வைத்து தவெகவிடம் கோரிக்கை சிவி சண்முகம் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் காரணமாக, தவெக தலைமை மிக கவனமாக இதை ஹேண்டில் செய்து வருகிறதாம். சி.வி.சண்முகம் அதிமுகவில் நீடிப்பதா அல்லது தவெகவில் முழுமையாகத் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதா என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அதிமுக
சிவி சண்முகம் அடுத்த நகர்வு?
தவெக கொடியுடன் ஆலோசனை?
எடப்பாடியாரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்