அதிகாலையில் கேட்ட அம்மா..அம்மா குரல்! அந்த 600 போன் கால்கள் ஆய்வு! செஞ்சி சிறுமி வழக்கில் ட்விஸ்ட்

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது பிடியை இறுக்கி வருகின்றனர். கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு வீட்டின் வாசற் கதவு திறந்திருந்த நிலையில் மாயமான சிறுமியைத் தேடும் பணி 12 நாட்களைக் கடந்துள்ளது.

    Advertisement

    தற்போது சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து கிடைத்துள்ள தகவல்களும் சாட்சியங்களும் ஒட்டுமொத்தப் பகுதியையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன.

    Advertisement

    நள்ளிரவு கேட்ட "அம்மா.. அம்மா" அழுகுரல்: எதிர்வீட்டுப் பெண் வாக்குமூலம்

    இந்த வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகளுக்குக் கிடைத்த மிக முக்கியமான தடயம் எதிர்வீட்டுப் பெண்ணின் சாட்சியம் ஆகும். சிறுமியின் வீட்டின் எதிரே வசித்து வரும் மஞ்சுளா என்ற பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர் ஒரு பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

    சிறுமி மாயமான அன்று அதிகாலை நேரத்தில், வீட்டின் வெளியே இருந்து ஒரு குழந்தையின் தீனமான குரலில் "அம்மா.. அம்மா.." என்று இருமுறை கதறி அழுத சத்தம் கேட்டதாகவும், ஏதோ விபரீதம் என்று உணர்ந்து அவர் உடனே கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது அந்த இடத்தில் யாருமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த வாக்குமூலம் வழக்கின் தீவிரத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. நள்ளிரவோடு நள்ளிரவாகக் குழந்தை தூக்கிச் செல்லப்படவில்லை; மாறாக அதிகாலை விடியும் நேரத்தில்தான் வாசலில் இருந்து யாரோ குழந்தையைக் கவர்ந்து சென்றிருக்கலாம் அல்லது வாயைப் பொத்தித் தூக்கிச் சென்றிருக்கலாம் என்ற வலுவான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

    ஊரைத் தாண்டாத சிறுமி: சிசிடிவி தந்த அதிர்ச்சித் தகவல்

    மறுபுறம், ஆலம்பூண்டி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த அத்தனை கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் சிபிசிஐடி மற்றும் காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்தனர்.

    அந்த வீடியோப் பதிவுகளின்படி, சிறுமி தானாக நடந்து ஊரின் எல்லையைக் கடந்ததற்கான எந்தவொரு காட்சியும் பதிவாகவில்லை. இதன் மூலம் குழந்தை எங்கும் தொலைந்து போகவில்லை; யாரோ திட்டமிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத மாற்றுப் பாதைகள் மூலமாகவோ அல்லது வாகனத்திலோ தூக்கிச் சென்றிருக்கலாம் அல்லது கிராமத்திற்குள்ளேயே எங்காவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற அதிர்ச்சி கோணத்தில் விசாரணை நகர்கிறது.

    Advertisement
    செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்! டவுசர் அணிந்த இரு முகமூடி கொள்ளையர்களுக்கு தொடர்பா? திடுக் தகவல்கள்

    600 போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்பு.. 12 பேரிடம் தீவிர விசாரணை

    தொழில்நுட்ப ரீதியான தடயங்களைக் கண்டறிய அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் டவர்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளைக் காவல் துறையினரும் சிபிசிஐடியினரும் தீவிரமாக ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய எண்களின் பதிவுகளை ஒப்பிட்டுச் சரிபார்த்துள்ளனர்.

    இந்த அழைப்புப் பதிவுகளின் அடிப்படையில் தற்போது வரை 12-க்கும் மேற்பட்ட நபர்களை சிபிசிஐடி தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். இதில் உள்ளூர் நபர்கள், சந்தேகத்திற்குரிய பழைய குற்றவாளிகள் மற்றும் சமீபத்தில் ஊருக்கு வந்து சென்ற வெளியாட்கள் அடங்குவர்.

    Advertisement
    செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணையில் புதிய நம்பிக்கை.. சிறுமி உயிருடன் இருக்க வாய்ப்பு?

    நடுப்பட்டு, ஆர்க்காம்பூண்டி கிணறுகளில் சல்லடை போட்டுத் தேடுதல்

    இதனிடையே, சிறுமிக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்கலாமோ என்ற அச்சத்தில், தரைவழித் தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் ஆலம்பூண்டியை ஒட்டியுள்ள நடுப்பட்டு, ஆர்க்காம்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு விரைந்துள்ளனர்.

    அங்குள்ள பாழடைந்த விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் புதர்களுக்குள் வீரர்கள் கயிறுகட்டி இறங்கிச் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர். தண்ணீரை இறைத்தும், கொக்கிகள் மற்றும் வலைகளைப் போட்டும் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன.

    Advertisement

    அதிகாலையில் கேட்ட அந்த அழுகுரலின் பின்னணி என்ன, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார் என்பதைக் கண்டறிந்து, மாயமான சிறுமி ஹேமாவதியை உயிருடன் மீட்க சிபிசிஐடி தனிப்படையினர் இரவும் பகலும் களத்தில் போராடி வருகின்றனர்.

    English Summary

    Gingee Missing Girl Case: "Amma" Cry in Dawn, 600 Phone Calls Tapped, Wells Searched as CB-CID Intensifies Hunt