செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த திருப்பம்! கடலூரில் இருக்கிறாரா ஹேமலதா? அவசரமாக பறந்த சிபிசிஐடி படை

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து 24 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

    Advertisement

    உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், தப்பியோடிய சாமியார், சுடுகாடுகள், காடுகள் மற்றும் நள்ளிரவில் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்கள் எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    Advertisement

    ஆனாலும், விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் சிறுமி குறித்து எந்தவொரு உறுதியான நல்ல தகவலும் சிக்கவில்லை. இந்தச் சூழலில், சிபிசிஐடி போலீசாரின் ரகசியத் தகவல் கொடுப்பாளர்கள் (Informers) அளித்த சில முக்கிய க்ளூக்களின் அடிப்படையில், புலனாய்வுத் தனிப்படையினர் தற்போது கடலூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரு மாவட்டங்களை நோக்கி அதிரடியாகப் பாய்ந்துள்ளனர்.

    கடலூருக்குப் பாய்ந்தது ஏன்? எழுந்திருக்கும் பலத்த சந்தேகம்!

    ஆலம்பூண்டி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள், ஏரிகள், கிணறுகளில் வனத்துறையினரின் உதவியுடன் சல்லடை போட்டும் குழந்தையின் ஆடையோ அல்லது செருப்போ கூட இதுவரை சிக்கவில்லை. இதனால் குழந்தை ஊருக்குள்ளேயே உயிரிழக்கவில்லை; மாறாக உயிருடன் கடத்தப்பட்டுப் பிற மாவட்டங்களில் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிறுமி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட குழந்தை ஒன்று மர்மமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

    குழந்தை மாயமான நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் - கடலூர் வழித்தடத்தில் இயங்கிய வாகனங்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கடலூரில் உள்ள குறிப்பிட்ட சில குடியிருப்புப் பகுதிகள், தோப்புகள் மற்றும் ஆதரவற்றோர் மையங்கள் அல்லது குழந்தைகள் காப்பகங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி தனிப்படையினர் மாறுவேடத்தில் களமிறங்கி ரகசியக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் கடத்தல் கும்பல் குழந்தையைக் கடத்திச் சென்று கடலூரில் உள்ள தங்களுக்குத் தெரிந்த மறைவிடங்களில் பதுக்கி வைத்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

    Advertisement

    நாமக்கல்லிலும் முகாமிட்ட மற்றொரு சிபிசிஐடி தனிப்படை!

    ஒருபுறம் கடலூரில் தீவிரத் தேடுதல் வேட்டை நடந்து வரும் அதே வேளையில், மேற்கு மாவட்டங்களில் ஒன்றான நாமக்கல்லிலும் மற்றொரு சிறப்பு சிபிசிஐடி தனிப்படை முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    நாமக்கல்லுக்கு விசாரணை நகர்ந்ததன் பின்னணியில் சில முக்கியப் புள்ளிகள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் மிகப்பெரிய லாரி போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும். சம்பவத்தன்று நள்ளிரவு செஞ்சி நெடுஞ்சாலையைக் கடந்த 14 நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, நாமக்கல் வழித்தடங்களில் இயங்கும் சில வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களின் பின்னணியை ஆய்வு செய்ய தனிப்படை அங்கே விரைந்துள்ளது.

    Advertisement

    பச்சிளம் பெண் குழந்தைகளை நள்ளிரவில் கடத்தி, குழந்தை இல்லாத குடும்பங்களுக்குச் சட்டவிரோதமாக லட்சக்கணக்கில் விற்றுவிடும் ஏஜென்ட்டுகள் அல்லது புரோக்கர்களின் நடமாட்டம் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளதா என்ற கோணத்திலும் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு தகவல்களைத் திரட்டி வருகிறது.

    செஞ்சி சிறுமி மாயம்.. அந்த நொடியில்.. இரவில் கடந்த நேஷனல் பெர்மிட் லாரி.. 14 பேரை தூக்கிய சிபிசிஐடி

    600 செல்போன் எண்கள் & இன்ஃபார்மர்களின் வலை

    ஏற்கனவே ஆலம்பூண்டி நள்ளிரவு டவர் டம்ப் (Tower Dump) மூலம் பெறப்பட்ட 600-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளில் சில எண்கள் கடலூர் மற்றும் நாமக்கல் கோபுர எல்லைகளுக்குள் சென்று செயல்பட்டது சிபிசிஐடி ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    டிஜிட்டல் ஆதாரங்கள் ஒருபுறம் இருக்க, காவல்துறைக்கு களத்தில் தகவல்களை வழங்கும் இன்ஃபார்மர்கள் கொடுத்த தகவல்களே தற்போது புலனாய்வை இந்த இரு மாவட்டங்களுக்கும் திருப்பியுள்ளது. தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்ய, இரு மாவட்டக் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. ஆடு மேய்க்கும் அரவிந்த்திடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை!

    24 நாட்களாகப் பசியோடு தவிக்கும் குடும்பம்

    "எங்களை பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பாதீர்கள்; நாங்கள் 20 நாளா வேலைக்குப் போகாமல் பசி பட்டினியில் கிடக்கிறோம்; எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம், குழந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள்" என்று தாய் பவானி கதறி அழுது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறார்.

    உள்ளூர் முட்டுக்கட்டைகளை உடைத்துவிட்டு, சிபிசிஐடி தனது பார்வையை எல்லை கடந்து கடலூர் மற்றும் நாமக்கல் வரை விரிவுபடுத்தியிருப்பது வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இன்ஃபார்மர்கள் கொடுத்த தகவல்களின் உண்மைத்தன்மை உறுதியானால், 24 நாட்களாக நீடிக்கும் இந்த மர்மத்திற்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சிறுமி ஹேமலதா பத்திரமாக மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Gingee Missing Girl Case: CB-CID Launches Urgent Hunt in Cuddalore and Namakkal After Secret Informer Leads