செஞ்சி சிறுமி மாயம்.. சீனுக்குள் வந்த பழைய குற்றவாளி ஒருவர்.. சிபிசிஐடி எடுக்கும் புதிய ரூட்!

  • விழுப்புரம்: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் தற்போது ஒரு பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி இந்த வழக்கு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி (ஹேமலதா) மாயமான வழக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலை மர்மமான முறையில் காணாமல் போனார்.

    Advertisement

    உள்ளூர் காவல்துறை 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் சிபிசிஐடி அதிகாரிகள் இணைந்து பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஒரு பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி இந்த வழக்கு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட ராஜதுரை யார்?

    ஆலம்பூண்டி கிராமத்திற்கு மிக அருகில் உள்ள பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையின் குற்றப் பதிவேட்டில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகக் குறிக்கப்பட்டுள்ள இவர், வேறு ஒரு குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    Advertisement

    சிறுமியைத் தேடும் பணியில் 600-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுர அழைப்புகளை ஆய்வு செய்தபோதும், அப்பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளின் நடமாட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோதும், சிபிசிஐடி அதிகாரிகளுக்கு ராஜதுரை குறித்த சில சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் இருந்து ராஜதுரையை வெளியே கொண்டுவந்த சிபிசிஐடி தனிப்படையினர், சத்யமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    பள்ளிக்கு நேரில் அழைத்துச் சென்று துருவல் விசாரணை

    சத்யமங்கலம் காவல் நிலையத்தில் முதற்கட்ட விசாரணையை முடித்த அதிகாரிகள், அங்கிருந்து ராஜதுரையை பலத்த பாதுகாப்புடன் நேரடியாக ஆலம்பூண்டியில் சிறுமி படித்து வந்த அரசு தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    சிறுமியின் வகுப்பறை, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளிக்கு அருகே செல்லும் மறைவான பாதைகள் வரை ராஜதுரையை நேரில் கூட்டிச் சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது:

    சிறுமி பள்ளிக்கு வரும் வழியிலோ அல்லது பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரங்களிலோ அவரை நோட்டமிட்டது உண்டா? பள்ளி வளாகப் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய முறையில் இவர் நடமாடியது உண்டா? சிறுமியின் குடும்பத்தினருடன் இவருக்கு ஏதேனும் பழைய கொடுக்கல் வாங்கல் அல்லது தகராறு இருந்ததா? கடத்தலுக்கு முன்னதாக சிறுமியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏதேனும் ஆட்கள் பயன்படுத்தப்பட்டார்களா?

    பள்ளி வளாகத்தில் வைத்து அதிகாரிகள் கேட்ட நேரடி கேள்விகளுக்கு ராஜதுரை அளித்த பதில்களை சிபிசிஐடி அதிகாரிகள் முழுமையாகப் பதிவு செய்துகொண்டனர்.

    Advertisement

    வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள்: கடத்தலில் உடந்தையா?

    சிறுமி மாயமான அன்று நள்ளிரவில் வீட்டின் வாசற்கதவு திறந்திருந்தது, அதிகாலையில் "அம்மா.. அம்மா" என்ற அலறல் குரல் கேட்டது, மற்றும் சிறுமி கிராம எல்லையைக் கடக்காதது என ஏற்கனவே பல முரண்பாடுகள் உள்ளன.

    தற்போது ராஜதுரை போன்ற ஒரு பழைய குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்படுவது, வெளிப்புற ஆட்களின் தலையீடு அல்லது கூலிப்படை கடத்தல் போன்ற கோணங்களை நோக்கி விசாரணை நகர்வதைக் காட்டுகிறது. ஒருவேளை சிறுமியை மயக்க மருந்து கொடுத்து காரிலோ அல்லது ரயிலிலோ கடத்துவதற்கு உள்ளூர் நெட்வொர்க் ஏதேனும் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    ஒருபுறம் சிறுமியின் தாய் பவானியிடம் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சாமியார் தொடர்பு குறித்து விசாரணை தொடரும் நிலையில், மறுபுறம் ஜெயிலில் இருந்த பழைய குற்றவாளியிடம் பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டுள்ள இந்த அதிரடி விசாரணை, வழக்கின் முக்கிய மர்மங்களை உடைத்து சிறுமியை மிக விரைவில் உயிருடன் மீட்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Gingee Missing Girl Case: CB-CID Pulls Habitual Offender Rajadurai from Jail Grills Him at Police Station and School