பூச நட்சத்திரம் கடக ராசி..சுத்த ஜாதகத்தில் பிறந்த செஞ்சி சிறுமி! விற்கப்பட்டாரா? சுறுசுறு சிபிசிஐடி!

  • விழுப்புரம்: செஞ்சி சிறுமி வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சிறுமி படித்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அவளது சகோதரி படிக்கும் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், 'ராசி - நட்சத்திரம்' உள்ளிட்ட காரணங்களுக்காக கடத்தப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கோவில் பூசாரி, மாயமான சிறுமிக்கு ஜாதகம் எழுதிக்கொடுத்தவர் ஆகியோரிடமும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

    Advertisement

    செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி, கடந்த 11ஆம் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை வேளையில் அச்சிறுமியை திடீரென காணவில்லை.

    Advertisement

    சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதுடன் பல இடங்களில் சிறுமியை தேடும் பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் 7வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    Advertisement

    இவ்வழக்கில் ஏற்கனவே உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஆதாரங்களை சேகரித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கினர். அதுபோல் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் என யார், யாரிடம் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினார்களோ அவர்கள் அத்தனை பேரையும் மீண்டும் சிபிசிஐடி போலீசார் வரவழைத்து விசாரித்து அதன் மூலம் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கூடுதல் தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.

    அதுபோல் கண்காணிப்பு கேமரா பதிவுகள், சிடிஆர் பதிவு, செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள் மூலமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் 2ஆம் கட்ட விசாரணையை நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    சிபிசிஐ.டி. போலீசார், 4 குழுக்களாக பிரிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக டிஎஸ்பிகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார், நேரடியாக சிறுமி படித்த ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவேட்டை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

    சிறுமியை கண்டுபிடிக்காத சிங்கப்பெண்கள் பாதுகாப்புப்படை! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

    பின்னர் சிறுமி மாயமான சம்பவம் குறித்து ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் பள்ளி நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் குறித்து தகவல்களை சேகரித்தனர். அதுபோல் மற்றொரு குழுவினர், சிறுமியின் சகோதரி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமி மாயமான சம்பவம் குறித்து அவளது சகோதரியின் சக தோழிகளிடம் கேட்டறிந்து விசாரணை நடத்தினர். இதுதவிர கண்காணிப்பு கேமரா பதிவுகள், சிடிஆர் பதிவுகளை ஒரு குழுவினரும், மற்றொரு குழுவினர் செல்போன் டவர் சிக்னல்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இவ்வழக்கு நாளுக்கு நாள் பெரும் மர்மமாக நீடித்து வரும் நிலையில், சிறுமி காணாமல் போனதாக கூறப்படும் 11ஆம் தேதி இரவு, பெற்றோர் வடிவேலு, பவானி மற்றும் சிறுமியின் பாட்டி ஆகிய 3 பேருடன் ஒரே அறையில்தான் படுத்து தூங்கியுள்ளாள். நள்ளிரவில் சிறுமி மட்டும் எப்படி தனியாக எழுந்து வெளியே சென்றாள்? யாருக்கும் எந்தவித சத்தமும் கேட்கவில்லையா? அல்லது யாராவது கதவை திறந்து உள்ளே வந்து சிறுமியை தூக்கிச்சென்றார்களா? அவ்வாறு தூக்கிச்சென்றிருந்தால் பெற்றோர் அல்லது பாட்டிக்கு எப்படி தெரியாமல் போனது? என பல முரண்பாடுகள் உள்ளது.

    இந்த முரண்பாடுகளை உடைக்க சிறுமியின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், கோவில் பூசாரி, மாயமான சிறுமிக்கு ஜாதகம் எழுதிக்கொடுத்தவர் ஆகியோரிடமும், ஆலம்பூண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரிடமும் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement
    செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அரசு.. பச்சை குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை! உதயநிதி

    சிறுமி ஹேமலதா, சுவாதி நட்சத்திரமான கடந்த 12ஆம் தேதி அதிகாலை மாயமாகியுள்ளார். அந்த நட்சத்திரத்தில் காணாமல் போகும் எதற்கும் 10 நாட்களில் துப்பு கிடைக்கும் என்பார்கள். அப்படி இருந்தும் சிறுமி மாயமாகி 17 நாட்களை கடந்தும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இச்சிறுமி பூச நட்சத்திரம் கடக ராசி உடைய சுத்த ஜாதகமாகும். எனவே இச்சிறுமியை பெற்றோர்களே மனமுவந்து தன் உறவினர்கள் யாருக்காவது தத்து கொடுத்தார்களா? அல்லது யாரேனும் ஆந்திரா அல்லது கர்நாடகாவிற்கு கடத்திச் சென்றனரா? என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    CBCID investigates the disappearance of seven-year-old Hemalatha in Gingee, questioning teachers, a temple priest and a horoscope writer while examining possible leads.