விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம், இரண்டு வாரங்களைக் கடந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை அதிகாலையில் மாயமானார்.
உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இரண்டு டிஎஸ்பிக்கள், மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள், அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம், ஜெயிலில் இருந்த பழைய குற்றவாளியிடம் விசாரணை, பெங்களூரு வரை நீண்ட தேடுதல் வேட்டை எனப் பல கோணங்களில் விசாரணை நகர்ந்தாலும், சம்பவம் நடந்து 17 நாட்கள் ஆகியும் குழந்தையை உயிருடன் மீட்கவோ, துப்பு துலக்கவோ முடியாத நிர்வாக மெத்தனம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தின்போது, "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கூறி தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்" என்று மேடைகளில் பேசி, இளம் தலைமுறையினரின் உணர்வுகளையும் பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்று அதிகாரக் கட்டிலில் ஏறிய ஒரு அரசு, இன்று அதே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் திணறி நிற்பது கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. "அரசு ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய சாமானிய மக்களின் குடும்பங்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் முழுப் பாதுகாப்பு கிடைக்கும்" என்று மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால், இன்று ஒரு 7 வயது கிராமத்துப் பெண் குழந்தை வீட்டுக்குள் படுத்திருந்த நிலையிலேயே மாயமாகி, 17 நாட்களுக்கு மேலாகியும் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூடத் தெரியாமல் தவிப்பது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற கசப்பான கேள்வியை எழுப்புகிறது. அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்கள் பிரச்சார மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுப்பதையும், ரீல்ஸ் போடுவதும், அவர்கள் மீது அளவற்ற பாசம் காட்டுவது போலவும் காட்டும் அக்கறை, உண்மையில் களத்தில் ஒரு குழந்தை ஆபத்தில் சிக்கும்போது எங்கே போகிறது என்று மக்கள் ஆவேசப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவோ அல்லது அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை நேரடியாக களத்தில் முகாமிட்டுத் தேட உத்தரவிடவோ அரசு தலைமை துரிதமாகச் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கிய பிறகே நிர்வாகம் கண் விழித்தது போல வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை தொடங்கி பல நாட்கள் உருண்டோடிய நிலையிலும் உருப்படியான ஒரு பதிலும் வெளிவரவில்லை. ஒரு பெரும் புள்ளியின் குழந்தையோ அல்லது செல்வாக்கு படைத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ மாயமாகியிருந்தால் காவல்துறை மற்றும் உளவுத்துறை இவ்வளவு மெத்தனமாக இருந்திருக்குமா? ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் குழந்தை என்பதால் தான் இத்தனை நாட்கள் இழுத்தடிக்கப்படுகிறதா என்று கிராம மக்கள் குமுறுகின்றனர். "என் குழந்தையை உயிருடன் மீட்டுத் தாருங்கள்" என்று தாய் பவானி நடுரோட்டில் நின்று கதறும் கண்ணீருக்கு ஆட்சியாளர்களிடம் என்ன பதில் இருக்கிறது? வெறும் கண்துடைப்பு அறிக்கைகளும், அதிகாரப்பூர்வ மாற்றங்களும் ஒரு குழந்தையின் உயிரை மீட்டுக் கொடுத்துவிடாது. வாக்குக் கேட்கும்போது குழந்தைகளைக் கேடயமாகப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே குழந்தைகளுக்கு ஆபத்து நேரும்போது மௌனம் காப்பது மிகக் கடுமையான வரலாற்றுப் பிழையாக மாறும். தமிழக அரசு தனது முழு அதிகாரத்தையும் காவல்துறையின் மொத்த பலத்தையும் பயன்படுத்தி, சிறுமி ஹேமலதாவை உடனடியாக உயிருடன் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்; தவறினால் மக்கள் மன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாக உள்ளது.தேர்தல் வாக்குறுதிகளும்... நடைமுறை ஏமாற்றங்களும்!
விளம்பர அரசியலுக்கு இடையே வீதியில் நிற்கும் பெற்றோர்
பூச நட்சத்திரம் கடக ராசி..சுத்த ஜாதகத்தில் பிறந்த செஞ்சி சிறுமி! விற்கப்பட்டாரா? சுறுசுறு சிபிசிஐடி!
சாமானியனின் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லையா?
Gingee girl: சாமியே சொல்லிடுச்சி! போலீஸ் கொடுத்த நம்பிக்கை! செஞ்சி சிறுமியின் தாய் பவானி!