விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து இன்றுடன் 23 நாட்கள் முடிவடைந்துவிட்டன. தனது 7-வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் உறங்கிய குழந்தை நள்ளிரவில் மாயமானார்.
உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆனால், சிபிசிஐடி தனிப்படையினர் அரசுப் பள்ளியில் முகாமிட்டும், காடுகளில் வனத்துறையினருடன் தேடுதல் நடத்தியும், பெங்களூரு வரை சென்றும் 23 நாட்களாக ஒரு 7 வயதுச் சிறுமி என்ன ஆனாள் என்ற சிறு தகவல் கூடக் கிடைக்கவில்லை. இப்படித் தமிழகத்தையே உலுக்கும் ஒரு மிகப்பெரிய வழக்கில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வரிடமிருந்து ஒரு சிறு ஆறுதல் வார்த்தை கூட வராதது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரக் களங்களில், "குழந்தைகள் உங்கள் பெற்றோரிடம் கூறி தனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று பேசி, பச்சிளம் குழந்தைகளின் உணர்வுகளையும், தாய்மார்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் வாக்குகளாக அறுவடை செய்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தமிழக முதல்வர் விஜய். ஆனால், அதே தமிழகத்தில் ஒரு 7 வயது பெண் குழந்தை வீட்டுக்குள் படுத்திருந்த நிலையிலேயே நள்ளிரவில் தூக்கிச் செல்லப்பட்டு, 23 நாட்களாகியும் என்ன ஆனாள் என்றே தெரியாமல் ஒட்டுமொத்த குடும்பமும் நடுரோட்டில் பசி பட்டினியோடு கதறி அழுகிறது. தேர்தல் மேடைகளில் குழந்தைகளைத் தன் சொந்த பிள்ளைகளாகக் காட்டிய அதே "விஜய் அங்கிள்", இன்று முதல்வரான பிறகு அந்த ஏழைக் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவோ அல்லது ஒரு போன் காலில் பேசி தைரியம் அளிக்கவோ முன்வராதது ஏன் என்று மக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்புகின்றனர். வழக்கு எல்லை மீறிப் போன பிறகு, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் போராடத் தொடங்கிய பிறகே வழக்கைத் சம்பிரதாயமாக சிபிசிஐடிக்கு மாற்றிவிட்டு அரசு தனது கடமை முடிந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்டது. ஒரு மாவட்டத்தின் எல்லைக்குள் 23 நாட்களாக ஒரு குழந்தை மாயமாகித் தேடப்படும்போது, துறை சார்ந்த அமைச்சரோ அல்லது முதல்வரோ களத்திற்குச் சென்று விசாரணையை முடுக்கிவிட உத்தரவிட்டது உண்டா? "என் குழந்தையை எப்படியாவது மீட்டுத் தாருங்கள்; நாங்கள் 20 நாளா பசி பட்டினியா கிடக்கிறோம்" என்று தாய் பவானி கதறிய பிறகும் கூட, அந்த தாயின் கண்ணீரைத் துடைக்க அரசு இயந்திரம் ஒரு சிறு ஆறுதல் அறிக்கையைக் கூட வெளியிடாதது ஏன்? அரசுத் தலைமை மௌனம் காப்பதால், காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் யூ-டர்ன் அடித்து நேரத்தைக் கடத்துகிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு பெரும் புள்ளியின் குழந்தையோ அல்லது அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பமோ பாதிக்கப்பட்டிருந்தால் ஆட்சித் தலைமை இவ்வளவு அலட்சியமாக மௌனம் காத்திருக்குமா? ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசிக்கும் ஒரு ஏழைக் கூலித் தொழிலாளியின் குழந்தை என்பதால் தான் இத்தனை புறக்கணிப்பா என்று சமூக ஆர்வலர்கள் வினவுகின்றனர். மேடைகளில் பேசுவது வெறும் சினிமா வசனம் அல்ல; அது ஆட்சி அதிகாரம். மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்த பிறகு, ஒரு பச்சிளம் குழந்தையைக் கூட பாதுகாக்க முடியாமல், காணாமல் போன குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க துப்பறியும் திறனின்றித் தவிப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் நேரில் பேசக் கூடத் தயங்குவதும் நிர்வாகத் திறமையின்மையையே அப்பட்டமாகக் காட்டுகிறது. வெறும் வழக்கமான புலனாய்வு மாற்றங்களால் எந்தக் குழந்தையையும் மீட்டுவிட முடியாது; தமிழக அரசு உடனடியாக மெத்தனத்தை விடுத்து, முதல்வரே நேரடியாக இதில் தலையிட்டுச் சிறுமி ஹேமலதாவை உயிருடன் மீட்காவிட்டால், இது மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகவே மாறும்.வாக்கு கேட்கும்போது 'விஜய் அங்கிள்'... ஆளுங்கட்சியான பின் ஆளே காணோமா?
அறிக்கையோடு நின்ற அரசு நிர்வாகம்
சாமானியனின் குழந்தைக்கு உயிர் மதிப்பு இல்லையா?