விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து 28 நாட்களை எட்டிவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.
ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும் ஒரு 7 வயதுச் சிறுமிக்கு என்ன நடந்தது, அவர் எங்கே இருக்கிறார் என்ற மிக அடிப்படையான தகவலைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த தமிழகக் காவல் துறையும் திகைத்து நிற்கிறது.
முதலில் களமிறங்கிய உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் வழக்கைச் சொதப்பினர்; பின்னர் வந்த மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையான சிபிசிஐடி (CB-CID) பல முனைகளில் சுழன்றடித்தும் ஒரு சிறு துப்பும் துலங்காமல் திணறி வருகிறது. இதனால் மாநிலக் காவல்துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்த சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆலம்பூண்டி கிராம மக்கள், இனியும் நேரத்தை வீணடிக்காமல் வழக்கை உடனடியாக மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். வழக்கின் தொடக்கத்திலிருந்தே மாநிலக் காவல்துறை காட்டிய மெத்தனமும் தவறான அணுகுமுறைகளுமே இன்று வழக்கு முட்டுச்சந்தில் நிற்க முக்கியக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்: முதல் 10 நாட்களில் குற்ற நடந்த இடத்தை சீல் வைக்காமல், நூற்றுக்கணக்கான மக்களை உள்ளே அனுமதித்ததால் மிக முக்கியமான விரல் ரேகைகளும் கால்தடங்களும் தொடக்கத்திலேயே அழிந்து போயின. அரசுப் பள்ளியையே முகாமாக மாற்றித் தாயையும் தந்தையையும் பல மணி நேரம் துருவினர்; சாமியார், பூசாரி, விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர், பழைய குற்றவாளி ராஜதுரை, ஆடு மேய்க்கும் அரவிந்த், 14 நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்கள் எனப் பலரையும் விசாரித்தனர். நாமக்கல் தாதகிரி முருகன் கோவிலில் சிறுமியைப் பார்த்ததாக அவசர உதவி எண் 100-க்கு நல்லெண்ணத்தோடு தகவல் தெரிவித்த அரசுப் பள்ளி பெண் சமையலரையே பல மணி நேரம் விசாரித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வளவு நடந்தும், 28 நாட்களுக்குப் பிறகும் சிபிசிஐடி கையில் "பூஜ்ஜியம்" என்ற நிலையே நீடிக்கிறது. ஆலம்பூண்டி கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் கூடிப் பேசி, தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்: குழந்தை ஊருக்குள் எங்கும் இல்லை என்பதும், சுடுகாடுகள் மற்றும் காடுகளில் உடலின் தடயங்கள் எதுவும் சிக்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. குழந்தை நேஷனல் பெர்மிட் லாரிகள் மூலமாகவோ அல்லது கடத்தல் கும்பல் மூலமாகவோ கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. மாநிலக் காவல்துறையின் எல்லை வரம்புகளைத் தாண்டி, நாடு தழுவிய அளவில் செயல்படும் சிபிஐயால் மட்டுமே பிற மாநிலக் குழந்தை கடத்தல் நெட்வொர்க்குகளை மிக வேகமாகப் பிடிக்க முடியும். இந்த வழக்கில் நடுப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் பணப் பரிமாற்றம், உள்ளூர் ரவுடிகளின் நடமாட்டம் எனப் பல்வேறு உள்ளூர் பின்னணிகள் அடிபடுகின்றன. உள்ளூர் அதிகார வர்க்கமும் காவல் துறையும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ள முயல்வதைத் தடுத்து, அரசியல் குறுக்கீடுகள் இன்றி நடுநிலையாக விசாரிக்க சிபிஐ அமைப்பால் மட்டுமே முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல மக்களின் கவனம் குறைந்துவிடும் என்பதால், சிபிசிஐடி இந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாத மர்ம வழக்கு என ஃபைலை மூடிவிடப் பார்க்கிறதோ என்ற அச்சம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழக்கு உடனே மத்திய ஏஜென்சிக்கு மாற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நாங்கள் வேலைக்குப் போகவில்லை; பசி பட்டினியில் கிடக்கிறோம். எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசாதீர்கள்; எங்களுக்குப் பணமோ அரசியலோ தேவையில்லை, என் குழந்தையை உயிருடன் மீட்டுத் தந்தால் போதும் என்று தாய் பவானி தொடர்ந்து கண்ணீர் மல்கக் கதறி வருகிறார். தேர்தல் பிரச்சார மேடைகளில் "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி தனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று குழந்தைகளைக் கொண்டாடிய தமிழக முதல்வர், 28 நாட்களாக ஒரு பச்சிளம் குழந்தை மாயமாகி நடுரோட்டில் ஒரு ஏழைக் குடும்பம் தவிக்கும்போது ஒரு ஆறுதல் வார்த்தை கூடப் பேசாமல் மெத்தனமாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகக் காவல்துறையும் சிபிசிஐடியும் இந்த வழக்கில் தங்களது முழு பலத்தையும் இழந்து முட்டுச்சந்தில் நின்றுவிட்டன. ஒரு குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் அரசு தனது கௌரவத்தைப் பார்க்காமல், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி அல்லது டிஜிபி மூலம் வழக்கின் முழு ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த 7 வயதுக் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே ஆலம்பூண்டி மக்களின் ஒட்டுமொத்தப் போர்க்குரலாக எதிரொலிக்கிறது.ஆரம்பம் முதல் இன்று வரை: திணறித் தவிக்கும் தமிழக காவல்துறை
உறவினர்களும் கிராம மக்களும் சிபிஐ கோருவது ஏன்?
எங்களுக்குப் புள்ள வேணும்.. அரசியல் வேணாம்