செஞ்சி சிறுமி மாயம்.. வழக்கை முடிக்க முடியாமல் சிபிசிஐடி திணறுவது ஏன்? முக்கியமான காரணம்!

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் நடந்து இன்றுடன் 28 நாட்கள் முடிவடைந்துவிட்டன. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

    Advertisement

    உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடி எந்தத் துப்பும் கிடைக்காமல் திணறியதால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு டிஎஸ்பிக்கள், மோப்ப நாய்கள், வனத்துறையினர், சைபர் தடயவியல் நிபுணர்கள், தமிழக உளவுப் பிரிவுகளான OCIU மற்றும் SBCID வரை களமிறக்கப்பட்டும் கூட, 28 நாட்களாக ஒரு 7 வயதுச் சிறுமி என்ன ஆனாள் என்ற மிக அடிப்படையான ரகசியத்தைக் கூட சிபிசிஐடியால் அவிழ்க்க முடியவில்லை.

    Advertisement

    வழக்கு தற்போது எந்தத் திசையில் பயணிக்கிறது? இவ்வளவு பெரிய காவல்துறை படையே களமிறங்கியும் வழக்கை ஏன் உடைக்க முடியவில்லை? இதற்கான கள எதார்த்தங்கள் என்னென்ன? ஒரு விரிவான பார்வை..

    வழக்கு இப்போது எங்கே பயணிக்கிறது?

    வழக்கின் ஆரம்பத்தில் "ஊருக்குள்ளேயே குழந்தை வழிதவறிப் போயிருக்கலாம் அல்லது கிணற்றில் விழுந்திருக்கலாம்" என்று உள்ளூர் காடுகளையும் விவசாயக் கிணறுகளையும் சலித்தெடுத்தனர். ஆனால், அங்கு எதுவும் சிக்காததால் புலனாய்வு தற்போது பல மாநில மற்றும் வெளிமாவட்ட எல்லைகளை நோக்கிச் சுழன்றடிக்கிறது:

    நாமக்கல் & சேந்தமங்கலம் தாதகிரி முருகன் கோவில்

    சிறுமி போன்ற உருவ அமைப்புக் கொண்ட குழந்தை ஒருவரை 35 வயது மற்றும் 55 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களுடன் பார்த்ததாகக் கூறப்பட்ட தகவலையடுத்து, அங்கு சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    குழந்தை மாயமான நள்ளிரவில் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வெளிமாநில ஆட்கடத்தல் கோணமும் ஆராயப்படுகிறது.

    நள்ளிரவு வாகனங்கள் & வில்லுப்பாட்டு குழு

    சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறுமியின் வீட்டின் முன்பாகச் சென்ற மினி வேனில் இருந்த நடுப்பட்டு வில்லுப்பாட்டு கலைஞர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

    சிறையிலிருந்து எடுக்கப்பட்ட ரவுடி ராஜதுரையை 4-வது முறையாக ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதோடு, அவரது கூட்டாளி அரவிந்தை காட்டுக்குள் அழைத்துச் சென்றும் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்தனை நாட்களாகியும் சிபிசிஐடியால் ஏன் வழக்கை முடிக்க முடியவில்லை?

    ஒரு கடத்தல் வழக்கில் முதல் 24 முதல் 48 மணி நேரமே குற்றவாளிகளையும் தடயங்களையும் பிடிக்க மிக முக்கியமான காலக்கட்டம். ஆனால், சத்யமங்கலம் உள்ளூர் போலீசார் முதல் 10 நாட்களை அலட்சியமாகக் கழித்தனர். குழந்தை படுத்திருந்த வீட்டிற்குள் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து சென்றதால் மிக முக்கியமான கைரேகைகள், கால்தடங்கள், ஆடைகளின் வாசனை உள்ளிட்ட தடயங்கள் தொடக்கத்திலேயே பாழாகிவிட்டன. இதனால் சிபிசிஐடி பொறுப்பேற்றபோது கையில் ஜீரோ தடயங்களே இருந்தன.

    Advertisement

    ஆலம்பூண்டி குளக்கரை தெரு என்பது அடர்ந்த முட்புதர்களும், வயல்வெளிகளும் கொண்ட கிராமப்புற மண் சாலை. அந்தத் தெருவிலோ அல்லது சுற்றுவட்டார வீடுகளிலோ ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை. பிரதான சாலைகளுக்கு வந்த பிறகே கேமராக்கள் உள்ளன. நள்ளிரவில் மின்விளக்குகள் இல்லாத இருட்டைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் காட்டுப் பாதைகள் வழியாக குழந்தையைத் தூக்கிச் சென்றதால், டிஜிட்டல் கண்காணிப்பில் எந்த நேரடி ஆதாரமும் சிக்கவில்லை.

    வழக்கு தாமதமாவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் நம்பகத்தன்மையற்ற போலித் தகவல்கள் ஆகும். "புவனகிரியில் பார்த்தோம்" என்று மதுபோதையில் ஒருவர் கூறிய தகவலை நம்பி தனிப்படை அங்கு விரைந்து ஏமாந்தது. அதேபோல் நாமக்கல் அங்கன்வாடி சமையலர் கொடுத்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய உளவுத்துறையும் சிபிசிஐடியும் பல நாட்களைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற வதந்திகள் புலனாய்வின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.

    Advertisement

    குடும்பத்திற்குள் நிலவும் முரண்பட்ட தகவல்கள்

    6 ஆண்டுகளாக இல்லாத திடீர் பிறந்தநாள் விழா, நள்ளிரவில் கதவு திறந்திருந்தது, நடுப்பட்டு முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் தாயார் வாங்கிய பணம், மற்றும் அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வருகை என ஒவ்வொரு நபரும் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் கதறி அழுத தாய், இப்போது "என் புள்ளை கண்டிப்பாக உயிரோடுதான் இருக்கிறாள்" என்று திடீரென அதீத நம்பிக்கையுடன் பேசுவது, குடும்ப வட்டாரத்திற்குள்ளேயே ஏதேனும் ரகசியங்கள் மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தைத் தீர்க்க முடியாமல் அதிகாரிகளைத் திணறடிக்கிறது.

    இது பணத்திற்காகக் குழந்தையைக் கடத்தும் கும்பலின் செயலா என்றால், இந்நேரம் குடும்பத்தினருக்கு மிரட்டல் அழைப்புகளோ அல்லது பணயக் கோரிக்கையோ வந்திருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அதேபோல் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான உடலோ அல்லது ஆடைகளோ காடுகளிலோ கிணறுகளிலோ கிடைக்கவில்லை. "உயிருடன் இருப்பதற்கான ஆதாரமும் இல்லை; உயிரிழந்ததற்கான தடயமும் இல்லை" என்ற இந்த இடைவெளிதான் வழக்கைத் தொடர்ந்து முட்டுச்சந்திலேயே நிறுத்தி வைத்துள்ளது.

    Advertisement

    28 நாட்களைத் தொட்டுவிட்ட இந்த வழக்கில், சிபிசிஐடிக்கு இன்னும் பலமான நேரடித் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குடும்ப ரகசியங்கள், உள்ளூர் ரவுடிகள் மற்றும் வெளிமாநில லாரி நெட்வொர்க் ஆகிய இந்த மூன்று தரப்பிற்கு இடையேயான தொடர்பை அறிவியல் பூர்வமாக இணைத்தால் மட்டுமே, செஞ்சி சிறுமி ஹேமலதா மர்ம வழக்கில் ஒரு தெளிவான விடை கிடைக்க வாய்ப்புள்ளது.

    English Summary

    Gingee Missing Girl Case: Why CB-CID Struggles to Crack Hemalatha Abduction Mystery After 28 Days