தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்

  • விழுப்புரம்: மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும்!கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் குறைந்திருப்பது தொடர்பாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜூக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதி உள்ளார்.

    Advertisement

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜூக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில், "அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே ( NFHS-6) அறிக்கையில் தமிழ்நாட்டைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அது 1.7 என்ற அளவில் உள்ளது. இது இனிவருங்காலங்களில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இப்போதுள்ள மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்துகொண்டே போகும்.

    Advertisement

    ஒரு பெண்ணுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் என்ற மொத்தக் கருவுறுதல் விகிதமே (TFR) சமநிலைக்கு ஏற்றதாகும். கருவுறும் வயதை அடைவதற்கு முன்பே ஏற்படும் இறப்பு விகிதங்களையும் ஈடுகட்டியவாறு, ஒரு தாய் தனக்கும் தன் இணையருக்கும் 'ஈடுசெய்வதற்கு' இந்த விகிதம் வழிவகை செய்கிறது.

    இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2.2 ஆகவும் பீகாரில் 2.7 ஆகவும் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. இதனால் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் ஒன்றிய அரசின் நிதியை அந்த மாநிலங்களே அதிகமாகப் பெறும். அத்துடன் தொகுதி மறுசீரமைப்பில் அந்த மாநிலங்களுக்குத்தான் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.

    Advertisement

    தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகித்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் இது ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கருத்தடை செய்துகொள்வோரின் விகிதம் 36.5 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது 56.6 ஆக உள்ளது. ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும்கூட தேசிய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் இரண்டு மடங்காக இருக்கிறது.

    தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதத்தின் (TFR) சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்தல்; கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் எனத் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ரவிக்குமார் எம்பி கடிதத்தில் கூறியுள்ளார்.

    English Summary

    The VCK has written to the Minister of Health, urging the announcement of incentives to encourage the birth of a third child, and calling for measures to prevent individuals from undergoing sterilization.