விழுப்புரம்: செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உறங்கிய சிறுமி ஹேமாவதி அடுத்த நாள் காணாமல் போனார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 10 நாட்களாக சிறுமியை தேடி வந்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிறுமி காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். செஞ்சி சிறுமி காணாமல் போய் 14 நாட்களாகியும் சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுபினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சைப் பதறவைக்கிறது. சாத்தான்குளத்தில் இரு சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் அறிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் சாதிய வன்கொடுமையால் 11 ஆம் வகுப்பு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார் . மறுபுறம், கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.ஊருக்கு உபதேசம் இருக்கட்டும்.. முதல்ல உங்க கட்சிக்காரங்களை பாருங்க! முதல்வர் மீது கனிமொழி சாடல்