ஆத்தா.. என் பிள்ளைய எனக்கு திருப்பிக் கொடு! அங்காளம்மனிடம் மடிப்பிச்சை கேட்ட செஞ்சி சிறுமியின் தாய்!

  • விழுப்புரம்: செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் இன்றோடு 26 நாட்கள் கடந்துள்ள நிலையில், சிறுமியின் தாய் பவானி, பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மடிப்பிச்சை ஏந்தி, தனது மகள் மீண்டும் வர வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுதல் வைத்தார்.

    Advertisement

    செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமலதா என்கிற ஹேமாவதி, கடந்த 11ஆம் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டு பெற்றோருடன் படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை வேளையில் அச்சிறுமியை திடீரென காணவில்லை.

    Advertisement

    சிறுமியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதுடன் பல இடங்களில் சிறுமியை தேடும் பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் 16வது நாளாக இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    Advertisement

    இவ்வழக்கில் ஏற்கனவே உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஆதாரங்களை சேகரித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கினர். அதுபோல் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் என யார், யாரிடம் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினார்களோ அவர்கள் அத்தனை பேரையும் மீண்டும் சிபிசிஐடி போலீசார் வரவழைத்து விசாரித்து அதன் மூலம் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கூடுதல் தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.

    அதுபோல் கண்காணிப்பு கேமரா பதிவுகள், சிடிஆர் பதிவு, செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள் மூலமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகளைக் காணாமல் 26 நாட்களாக தவித்து வரும் தாய் பவானி, கடைசி நம்பிக்கையாக அம்மனை நாடி மேல்மலையனூர் வந்தார்.

    Advertisement

    பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் மடிப்பிச்சை ஏந்தி சாமி தரிசனம் செய்த அவர், "அம்மா... என் மகளை என்னிடம் திருப்பிக் கொடு... அவள் எங்கிருந்தாலும் நல்லபடியாக என்னிடம் வந்து சேர வேண்டும்" என கண்ணீர் மல்க தனது வேண்டுதலை முன்வைத்தார். அப்போது அவரைச் சுற்றியிருந்த பக்தர்களும், உறவினர்களும் அவருக்கு ஆறுதல் கூறினர். அங்காளம்மன் நிச்சயம் குழந்தையைக் கொண்டு வந்து சேர்ப்பாள் என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறினர்.

    26 நாட்களாகியும் மகள் குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடும், கண்ணீரோடும் காத்திருக்கும் அந்தத் தாயின் வேண்டுதல், மேல்மலையனூர் கோவிலில் இருந்த அனைவரின் மனதையும் உருக்கியது.

    English Summary

    Mother of missing seven-year-old Hemavathi prays at Melmalayanur Angalamman Temple, hoping her daughter will return safely.