கொடுமை! சட்டசபையில் சிவி சண்முகம் பேசியும்.. நடுவனந்தலில் மூடிய டாஸ்மாக் கடை திருஷ்டி சுற்றி திறப்பு

  • விழுப்புரம்: சட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டதால் திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராமத்தில் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மூடப்பட்ட டாஸ்மாக் கடை, தற்போது அதே பகுதியில் அமாவாசை தினமான நேற்று திருஷ்டி சுற்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் போலீசார் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேசும் போது, செஞ்சி வட்டம், ஜம்போதி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடை, நிலைப்பிரச்சனை மற்றும் வாடகை பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை அடிப்படையில் திண்டிவனம் வட்டம் நடுவனந்தல் கிராம எல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    Advertisement

    அந்த கடைக்கு அருகில் 1.5 கிமீ தொலைவிற்கு குடியிருப்புகளே இல்லை. அதேபோல் கோயில், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், ஜம்போதி கிராமத்தில் மூடப்பட்ட கடையை 25 கிமீ தாண்டி, திண்டிவனம் நகரத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள நடுவனந்தல் எல்லையில் திறந்துள்ளனர்.

    எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், யாருக்கும் தெரியாமல், கடை எண் கூட இல்லாமல் திறந்துள்ளனர். சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 80 ஆண்டுகளாக எந்தவித மதுக்கடைகளும் இருந்ததில்லை. நகரத்தில் இருந்து மாற்றி வந்து கிராமத்தில் டாஸ்மாக் கடையை வைக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்டச் ஆட்சித் தலைவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் தகவல் உண்மைக்கு மாறான தகவல்.

    Advertisement

    இதனால் உடனடியாக ஆய்வு செய்து அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் மக்களிடையே விவாதமாகிய நிலையில், உடனடியாக டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது. ஆகஸ்ட் 3வது வாரத்தில் இந்த கடை மூடப்பட்ட சூழலில், தற்போது அமாவாசையான நேற்று திருஷ்டி சுற்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்ட போது பொதுமக்கள் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி இருந்தனர். இதனால் மீண்டும் மக்கள் போராட்டம் நடக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உடன் போலீசார் டாஸ்மாக் மதுபான கடையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இதன்பின் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மதுபான கடைக்கு வந்து மது வாங்கி செல்கின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பின் 717 மதுபான கடைகளை மூடியதாக அறிவித்தது. ஆனால் அவ்வாறு மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை வேறு இடங்களில், குறிப்பாக கிராமங்களில் திறப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த முறை சிவி சண்முகம், டாஸ்மாக் கடை எண் கூட இல்லாமல் மதுபான கடையை திறந்ததாக குற்றம்சாட்டினார். இம்முறை டாஸ்மாக் கடை எண்ணுடன் மதுபான கடை திறக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருப்பது அப்பகுதி கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Tasmac Shop Near Tindivanam Reopens After Being Shut Down Following CV Shanmugam Assembly speech