விழுப்புரம்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. ஆனால் இதையே திமுக பெருமையாக நினைக்கிறது. திமுகவுக்கு தோல்வியில் வெற்றி என்று முக ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் ஆண்ட கட்சி இரண்டாமிடம் பிடிப்பதை பெருமையாக பேசுகிறார்கள். திமுகவுக்கு உளவியல் சிக்கல் உள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன், "இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பிடித்ததையே வெற்றி என்று பேசுகிற நிலையில் திமுக உள்ளது. நான் கேட்கிறேன். இரண்டாவது இடமே போதுமா. முதல் இடம் வேண்டாமா. தனித்து நின்று நீங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுவிட்டது உண்மை தான். நீங்கள் வெற்றி பெறுவதற்கு இன்னும் கூடுதலாக வாக்குகள் தேவைப்படுகிறது. அதற்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படுகிறது. இதுதானே அரசியல். இதுதானே சுய விமர்சனம்.
அப்படியென்றால் இந்த கூட்டணி கட்சிகள் யார். எந்த கட்சிகளை வைத்து திமுகவுக்கு தேவையான வாக்குகளை ஈடுகட்ட முடியும். 35 மார்க் எடுத்தால் தான் பாஸ். 34 எடுத்துவிட்டேன் என்று பெருமைப்பட்டால் எப்படி. அடுத்தமுறையும் 34 எடுப்பேன் என்று சொல்வது பெருமையா. மூன்றாவது முறை தேர்வு செய்தாலும் 34 மார்க் எடுப்பேன் என்று சொல்ல முடியுமா. 35 மார்க் எடுத்தால் தானே பாஸ். அப்படியென்றால் 35க்கு இன்னும் ஒரு மார்க் தேவை தானே. அந்த ஒரு மார்க் போடக்கூடிய வாத்தியார் யாரென்று பார்க்க வேண்டுமா இல்லையா. அந்த ஒரு மார்க் போடுகிற வாத்தியார் வேண்டுமா வேண்டாமா. இதைப்பற்றி அங்கே பேச ஆள் இல்லை. ஆட்சியை கைப்பற்றுவதற்கான வெற்றி தேவை. நீங்கள் சொல்வதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு சதவீதம் வாக்கு தான் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவை ஒரு சதவீதம் தான் என்றால், கூட்டணிக்கு விசிக தேவைப்படுகிறதா இல்லையா. அப்போது விசிகவை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது தானே அரசியல். எங்களுக்கு ஆட்சி தேவையில்லை என்றால் பிரச்சனை இல்லை. இரண்டாவது இடத்திலேயே இருந்து கொள்ளலாம். எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு ஆண்ட கட்சி, முதலிடத்தில் இருந்த கட்சி, இரண்டாமிடம் வந்திருப்பதை பெருமை பேசுகிறது என்று சொன்னால். அவர்கள் என்ன உளவியலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை தயவுகூர்ந்து எண்ணி பார்க்க வேண்டும்" என்றார். திருமாவளவனின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.இரண்டாமிடமே பெருமையா
உளவியல் சிக்கல்