போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி 'கருப்பு' படம் பார்த்த கைதி.. தியேட்டர் இன்டர்வெல்லில் கிளைமாக்ஸ்!

  • விருதுநகர்: போலீசாருக்கு போக்கு காட்டிவிட்டு, தியேட்டரில் அமர்ந்து ஹாயாக 'கருப்பு' படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த 100 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதியை, போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகமது உசேன். திருச்சியில் தாய், மகளைக் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்றவர். திருட்டு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய முகமது உசேனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    Advertisement

    கொடூர குற்றவாளி

    கடந்த மே 9 ஆம் தேதி அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பாதுகாப்பாகப் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தண்ணீரை திறந்து விட்டு தான் இருப்பதைப் போல காட்டிவிட்டு, மருத்துவமனை கழிவறையின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதன் வழியே நைசாகத் தப்பியோடினார் முகமது உசேன்.

    வெகு நேரமாகியும் திறக்காததால், கழிவறை கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் கைதி முகமது உசேன் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. தலைமறைவான கைதியைத் தேட சேலம் மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.கிரி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    Advertisement

    சிசிடிவி காட்சிகள் மற்றும் பழைய கூட்டாளிகளின் விபரங்களை வைத்து போலீசார் வலைவீசினர். ஆனால், உசேன் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து 13 நாட்களாகத் தலைமறைவாக இருந்து வந்தார்.

    வேஷம்

    மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி முகமது உசேன், அம்மாபேட்டை பகுதியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து, அதில் இருந்த ஏழு பவுன் நகை, ரூ. 2,500 ரொக்கம் மற்றும் டூவீலர் ஆகியவற்றை திருடிச் சென்றது போலீசாருக்குத் தெரியவந்தது.

    மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், வீட்டுக்குள் தலை மற்றும் முகத்தில் முடிகள் நிறைந்த நிலையில் முகமது உசேன் சென்றதும், பின்னர் வீட்டை விட்டு வெளியே வரும்போது தலைமுடி, மீசை மற்றும் தாடி ஆகியவற்றை அகற்றிவிட்டு வந்ததும் தெரியவந்தது. அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்.

    Advertisement

    தியேட்டரில் போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

    இந்நிலையில், முகமது உசேன் விருதுநகரில் பதுங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அவர் எங்கு இருக்கிறார் எனத் தேடியபோது, அவர் விருதுநகரில் உள்ள ஒரு பிரபல தியேட்டரில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளது தெரியவந்தது.

    தியேட்டருக்குள் இருட்டாக இருந்ததால், படம் ஓடிக்கொண்டிருந்த போது கைதியை அடையாளம் காண்பதில் சவாலாக இருந்தது. இதனால் பொறுமையாகக் காத்திருந்த தனிப்படை போலீசார், படத்தின் இடைவேளை விடப்பட்டு தியேட்டரில் லைட் எரியும் வரை காத்திருந்தனர்.

    இண்டர்வெல்லில் கைதிக்கு கிளைமாக்ஸ்

    இண்டர்வெல்லில் லைட் எரிந்ததும், சீட்டில் அமர்ந்து ஹாயாகப் படம் பார்த்துக் கொண்டிருந்த முகமது உசேனை சூழ்ந்து கொண்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தப்பி ஓடிய கைதிக்கு தியேட்டரிலேயே 'கிளைமாக்ஸ்' காட்சி அரங்கேறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    கைது செய்யப்பட்ட முகமது உசேன் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். வீட்டில் கொள்ளையடித்தது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 13 நாட்களாகப் போலீசாருக்குத் தண்ணி காட்டிய கைதி, தியேட்டரில் படம் பார்க்க வந்த இடத்தில் சிக்கிய இந்தச் சம்பவம் தற்போது காவல்துறை வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    An incident has unfolded in Virudhunagar, where police caught—red-handed—a prisoner serving a 100-year prison sentence who, escaped from police, was sitting comfortably in a movie theater, watching and enjoying the film 'Karuppu'.