விருதுநகர்: சிவகாசி சோசியல் மீடியா பிரபலங்கள் தமிழக அரசின் மீது குறை சொல்லி வீடியோ போட்டால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கீர்த்தனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சோசியல் மீடியா பிரபலங்களை எப்படி கண்காணிப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைத்த முதல் 3 மாதங்களில் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. தொழில்துறை அமைச்சராக இருந்து கொண்டு ரீல்ஸ் வெளியிட்டது, திடீரென பள்ளிகளுக்கு ஆய்வுக்கு சென்று ஆங்கிலம் தெரியாதா என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்த சம்பவங்கள் மக்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்றது.
அதேபோல் திமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று கூறி, ஆதாரமாக சோசியல் மீடியா பதில்களை காட்டியது கிண்டலுக்கு உள்ளாகின. சட்டசபையிலும் கீர்த்தனாவின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளித்தன. இதனால் தொழில்துறையை அமைச்சர் மரிய வில்சன் வசம் ஒப்படைக்க முதல்வர் விஜய் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் சிபாரிசு காரணமாக அமைச்சர் கீர்த்தனாவின் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெரிகிறது. சட்டசபையில் இவர்கள் இருவரின் பெயர்களை கூறி நன்றி சொல்லி தொடங்கி வைத்ததே கீர்த்தனா தான். இதனால் அமைச்சரவையில் மாற்றம் நடந்தாலும், கீர்த்தனா பதவிக்கு சிக்கல் என்று தெரிகிறது. அதேபோல் கீர்த்தனாவும் எந்த சர்ச்சையிலும் சிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஆய்வு உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை. இந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி சிவகாசி யூனியன் அலுவலகத்தில் அலுவலர் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களை அழைத்து கீர்த்தனா கெளரவப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவகாசியை சேர்ந்த சோசியல் மீடியா பிரபலங்கள் அரசு தொடர்பாக என்ன குறை சொல்லி வீடியோ வெளியிட்டாலும் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோசியல் மீடியா பிரபலங்களை கண்காணிப்பதே நமது வேலை என்று இப்போதே புலம்ப தொடங்கி இருக்கிறார்கள். மறுபக்கம் செய்தியாளர்கள் ஆய்வு செய்து வெளியிடும் செய்திகளுக்கு பதிலாக சோசியல் மீடியா பிரபலங்களை அமைச்சர் கீர்த்தனா நம்புவதும் விவாதமாகி இருக்கிறது.