கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.. திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்!

  • விருதுநகர்: தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானபோது, திமுக- அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த பேச்சுவார்த்தையை நடத்த உதவியதே பாஜக என்றும் அதைத் தெரிந்து கொண்டே அந்தத் திட்டத்தை தாங்கள் முறியடித்ததாகவும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, திமுக கூட்டணியில் இருந்து விலகி முதலில் விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் தான். இதனால் அக்கட்சியைத் திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே திமுக- அதிமுக இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்ததே பாஜக தான் என்று மாணிக்கம் தாகூர் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்.

    Advertisement

    மாணிக்கம் தாகூர்

    இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், "தேர்தல் முடிவு வெளியான நாளிலேயே திமுக - அதிமுக கூட்டணி பேச பாஜக உதவியது.. 4ஆம் தேதி 3 மணிக்கு, பாஜகவின் முக்கிய தலைவர் அதிமுக, திமுக தலைவர்களைத் தொடர்பு கொண்டார். 5 மணிக்கு இருவரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது தொடர்பான தகவல் எங்களுக்கு வந்தது. அதாவது பாஜக இரு தரப்பிற்கும் 'கனெக்டிங் கால்' போட்டுள்ளது என்றார்கள்.. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கனெக்டிங் கால் போட்டுவிட்டது பாஜக. கனெக்டிங் கால் போட்டவுடனே எங்களுக்குத் தகவல் வந்துருச்சு, கனெக்டிங் கால் ஆயிடுச்சு என்ற தகவல் வந்துவிட்டது.

    Advertisement

    இப்போது இதே தகவலை நீங்க இன்னொரு ஆள்கிட்டயும் கேட்கலாம். சி.வி. சண்முகத்திடமும் நீங்கள் இதைக் கேட்கலாம். அன்று மாலை தான் ஒரு அமைச்சர் பேசுகிறார் என்று சொன்னார். 4ஆம் தேதி மாலை பேச்சு நடந்துள்ளது. இவர்கள் பேச ஆரம்பித்தது 3 மணிக்கு, கனெக்டிங் கால் போட்டது பாஜக.

    உதயநிதி

    திமுகவின் அனைத்துக் கொள்கைகளையும் குப்பையிலே தூக்கிப் போட்டுவிட்டு, அதிமுகவின் சேர ரெடியாக இருந்தது உதயநிதி தான். அவரை பொறுத்தவரை விஜய் முதல்வராக்கக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்து தோற்று இருக்கிறார்.

    எடப்பாடியை முதல்வராக்க வேண்டும்.. திமுக வெளியிலிருந்து சப்போர்ட் பண்றோம் இது தான் அவர்கள் டீல். விஜய் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பாஜக தான் கனெக்டிங் கால் போட்டனர் என்பதால் ஆளுநரும் உதவியாக இருப்பார். அதனால்தான் விஜய்யை அலக்கழித்தனர். இதை அப்போதே சொன்னால் தவறாக இருக்கும் என்று தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். இடதுசாரி தலைவர் பேபி, திருமாவளவன், சண்முகம், ஐயுஎம்எல் தலைவர் என அனைவரும் இந்த பேச்சுவார்த்தையை உறுதி செய்துள்ளனர். இதன் பிறகும் திமுக பொய் நாடகம் போடத் தேவையில்லை.

    Advertisement

    திமுக- அதிமுக

    இப்போது திமுகவும் அதிமுகவும் ஒரே பக்கத்திற்கு வந்துவிட்டார்கள். அதைச் செய்தது விஜய். வெகு விரைவிலேயே இரு கட்சிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள். முதலில் பாஜகவின் தீர்மானங்களுக்கு என்பதில் இருந்தே இது ஆரம்பிக்கும். எதிர்க்கட்சியுடன் உட்கார மாட்டேன் என இப்போது சொல்லி இருக்கிறார்கள். பிறகு மெல்ல பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். இதற்கு முழுக் முதல் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான்.

    திமுக கொள்கைகளைக் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டார். இவ்வளவு நாட்கள் எதற்காகப் போராடினார்களோ.. அதைக் குப்பையில் போட ரெடியாகிவிட்டார். அவருடைய வன்மம் நேற்று தெரிந்தது. 55, 60 வயதைக் கடந்தவர்களை எல்லாம் இளைஞரணி என உட்கார வைத்துவிட்டு, காங்கிரஸை பற்றி வன்மையாகப் பேசியிருக்கிறார். அதைக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் திரும்ப அடிக்க தெரியும். திரும்ப அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    Advertisement

    ஒரே கொள்கை

    பாஜக நேரடியாகவை மறைமுகமாகவோ தமிழகத்தில் வரக்கூடாது என்பதே ஒரே கொள்கை. அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யக்கூடியவர்கள். திமுக- அதிமுகவுக்கு கனெக்டிங் காலை பாஜக போட்டுவிட்டது என்ற தகவல் வந்தவுடன் தான் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றினோம். ஒரு பக்கம் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு.. இன்னொரு பக்கம் இதைச் செய்து கொண்டு இருந்தார்கள்.

    இவர்கள் போட்ட திட்டத்தைக் காங்கிரஸ் தான் உடைத்தது. இதனால் காங்கிரஸ் மீது பயங்கரக் கோபத்தில் இருக்கிறார்கள். நம்ம எல்லாரும் சேர்ந்து பழனிசாமியை ஆதரிப்போம், விஜய்யை தடுப்போம் என்பது அவர்கள் திட்டம். அதை நாங்கள் காலி செய்துவிட்டோம். பாஜக உள்ளே வருவதைத் தடுத்துவிட்டோம். நாங்கள் இதைச் செய்ததால் உதயநிதி இப்படி எல்லாம் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு இப்படிப் பொறுப்பு இல்லாமல் பேசக்கூடாது" என்றார்.

    English Summary

    Congress MP Manickam Tagore leveled serious allegations against DMK leader Udhayanidhi Stalin(திமுக அதிமுக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர்): Manickam Tagore on DMK ADMK alliance after election results.