ஆங்கிலத்தை வைத்து கேலி.. அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி நான்.. அமைச்சர் கீர்த்தனா பதில்

  • விருதுநகர்: அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி மாணவியிடம் தமிழக வர்த்தக அமைச்சர் கீர்த்தானா கேட்ட கேள்வி மற்றும் அந்த சந்திப்பு ஊடகங்களில் பரவியது. இதனை கண்ட திமுகவினர் அரசு பள்ளி மாணவியின் தன்னம்பிக்கையை குலைக்க வேண்டாம் என்றும் இப்படி வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது தவறு என்றும் விமர்சித்தனர். முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரும் அமைச்சர் கீர்த்தனாவின் செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.

    Advertisement

    இது ஒருபுறம் எனில், அமைச்சர் கீர்த்தனாவின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து பல திமுக நிர்வாகிகள் நேற்று முதலே கிண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட பதிவில் கூறுகையில், "நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.

    கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.

    Advertisement

    என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள். மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.

    இன்னொரு கேள்வி...

    இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்." இவ்வாறு கூறியுள்ளார்.

    English Summary

    Minister Keerthana has responded, stating that the information circulating about a government school student being mocked is false, and noting that she herself studied in a government school through the Tamil medium.