கூமாபட்டி அருகே கேட்ட பயங்கர சத்தம்.. தனியார் பாரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பணியாளர் காயம்!

  • விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகே தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர்.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம்போல் கடை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் மது போதையில் மதுபான கடையின் வெளிச் சுவர் மற்றும் கடையின் உள் சுவர் என 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    Advertisement

    இந்த சம்பவத்தில் கடையில் வேலை பார்க்கும் மாயன் (34) என்பவர் காயம் அடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக கூமாபட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர்.

    பின்னர் கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு எதற்காக மதுபான கடையில் வீசப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், தனியார் மதுபான கடை வளாகத்தில் மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு பணி செய்யும் ஊழியர்களிடம் ஏற்பட்ட வாய்தகராறில் காட்டு பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தும் அவுட் காய்களை தனியார் மதுபான கடையில் சுவரில் வீசியதாக தெரியவந்துள்ளது. தனியார் மதுபான பாரில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    An incident involving the hurling of a country-made bomb at a private liquor shop near Koomapatti in the Virudhunagar district has caused a great sensation. One person was injured in this incident. The police have launched a massive manhunt to apprehend the unidentified individuals who threw the bomb.