சோத்துல மண்ண அள்ளிப் போட்டீங்களே! அமைச்சர் கீர்த்தனா இனி ஊருக்குள்ள வர முடியாது! ஆதங்கப்பட்ட பெண்!

  • விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஜூலை மாதம் முதல் தமிழக அரசு உத்தரவின்படி அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் ஆய்வுகளால் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனையடுத்து ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனாவை இனி சிவகாசி ஊருக்குள் நுழைய விட மாட்டோம் என தொடர் ஆய்வினால் மூடப்பட்ட பட்டாசு ஆலையில் பணியாற்றி வேலை இழந்த பெண் பட்டாசு தொழிலாளி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் காரணமாக சுமார் 200 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில் வேலை இழந்த தொழிலாளர்களில் ஒருவரான பெண் தொழிலாளி ஒருவர், அமைச்சர் கீர்த்தனாவிற்கு கண்ணீர் விட்டு அழுதபடி தங்களது கஷ்டத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் கண்ணீரில், துன்பமும் துயரமும் கொண்டு உணவிற்கு கூட வழியில்லாமல் வட்டி கட்டி சாகிறோம் என கண்ணீர் விட்டு அழுத பெண்மணி ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்," எங்களது கண்ணீருக்கு அமைச்சர் கீர்த்தனா பதில் அளிக்க வேண்டும். வாக்கு சேகரிக்க வந்த போது உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பேன், எல்லா மக்களுக்கும் துணையாக இருப்பேன்.

    Advertisement

    பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்றெல்லாம் சொன்னீர்களே, உங்களை எங்களது பிள்ளையாக நினைத்து தான் வாக்களித்தோம். ஆனால் தற்போது எங்களது கஷ்டத்தை கேட்க கூட வராமல் தீவிரவாதி போல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்களே என சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்மணி கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று சொன்னீர்களே.. உங்களை எங்கு தேடினாலும் கண்ணில் தென்படுவதில்லையே..

    உங்களால் ஒருநாள் சாப்பிடாமல் இருக்க முடியுமா? நாங்கள் நான்கு மாதங்களாக சாப்பிடாமல் பசி பட்டினியோடு இருக்கிறோம். உங்கள் பசியை போல் ஏன் ஏழைகளின் பசியை பார்ப்பதில்லை? பட்டாசு தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

    Advertisement

    தங்களைப் போல் எங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா? நீங்கள் மீண்டும் சிவகாசி ஊருக்கு கால் எடுத்து வைக்க வேண்டும் என்றால் பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும். இல்லையென்றால் சிவகாசிக்குள் உங்களை நுழைய விட மாட்டோம். அவ்வளவு கொந்தளிப்பில் இருக்கும் எங்களது கண்ணீருக்கு நீங்கள் 4 நாட்களில் பதில் சொல்ல வேண்டும்" என ஆதங்கதை கொட்டி தீர்த்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    English Summary

    A Sivakasi firecracker worker voices anguish over factory closures, job losses and mounting financial hardships, questioning Minister Keerthana.