ஸ்டாப்புல பஸ்ஸே நிக்குறதுல்ல! எதுக்கு மேடம் வெற்றிப் பயண திட்டம்? கீர்த்தனாவை அலறவிட்ட பெண் பயணி

  • விருதுநகர்: சிவகாசி - திருத்தங்கல் சாலையில் மகளிர் வெற்றிப் பயண பேருந்துகள், பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாகவும், இதனால் இத்திட்டத்தின் மூலம் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் பெண் பயணி ஒருவர் அமைச்சர் கீர்த்தனாவிடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேரில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பயணிகளிடம் அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்தார். இதற்குப் பதிலளித்த பெண்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்குப் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் எனக் குறிப்பிட்டதுடன், மத்திய அரசிடம் பேசி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பெண் பயணி புகார்

    இதனைத் தொடர்ந்து, சிவகாசி - திருத்தங்கல் சாலையில் இயக்கப்படும் மகளிர் வெற்றிப் பயண பேருந்துகள் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாகப் பெண் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார்.

    Advertisement

    இதனால், இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். "குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்கு செல்கிறோம். ஆனால் டவுன் பஸ் நிறுத்தாததால் தாமதமாக வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

    கீர்த்தனா உறுதி

    மேலும், மகளிர் வெற்றிப் பயண பேருந்துகளின் நடத்துநர்கள் பெண் பயணிகளை முறையாக நடத்துவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதற்கு கீர்த்தனா, "இன்று மாலை முதல் பேருந்துகள் நிறுத்தப்படும்" என உறுதியளித்தார்.

    இதையடுத்து, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்திய அமைச்சர் கீர்த்தனா, அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அனைத்துப் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்திச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

    Advertisement

    மகளிர் இலவசப் பயணத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், பேருந்து சேவையில் நிலவும் குறைகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலையில், அமைச்சரிடம் பெண் பயணி நேரடியாகப் புகார் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இலவச பேருந்து பயணம்

    தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் நகர பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லும் விரைவு பேருந்துகள், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை விரிவாக்கம் செய்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று விஜய் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மாவட்டம் மாவட்டமாக பேருந்து மாறி மாறி பெண்கள் இலவசமாகவே கன்னியாகுமரிக்கு செல்லலாம்.

    Advertisement

    டாக்ஸி டிரைவர்கள்

    இந்த பேருந்து பயண திட்டத்தை பல்வேறு பெண்கள் வரவேற்கிறார்கள். அதே வேளையில் கிராமப்புறங்களில் வெற்றி பயண திட்ட பேருந்துகள் பேருந்த நிறுத்தங்களில் நிற்பதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மேலும் இந்த வெற்றி பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.