விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் கூமாபட்டி பேக்கரி கடையில் ஜூஸ் கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த நபர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் வன்முறையில் பீகாரை போல் உருவெடுக்கிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு மதியம் வந்த ஜப்பானி என்பவரது மகன் இசக்கிபாண்டி (26), ஜூஸ் கேட்டாராம்.
இந்த நிலையில் ஜுஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு இசக்கிபாண்டி கடைக்கு வந்து மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து கடைக்குள் எரிந்த நிலையில் கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூமாபட்டி பேக்கரி கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இது போன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தமிழகத்திலும் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. சிறிய சண்டை சச்சரவுகளுக்கு கூட வன்முறையை இளைஞர்கள் கையில் தூக்குகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் தெருவில் போதாயில் தகராறு செய்தவர், டீக்கடை மீது நள்ளிரவு 5 பேர் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசித் தீ வைத்த சம்பவம் நடந்தது. மதுரையில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் காதல் விவகாரம் தொடர்பாக தனது காதலியின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். அது போல் கோவையில் பேச மறுத்த பெண்ணின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி எறிந்து தீ வைத்த சம்பவம் நடந்தது. இதே போன்று பீகாரிலும் நடந்துள்ளன. அதாவது பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர் கூடுதலாக சட்னி கேட்ட போது கடைக்காரருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இதனால் வாடிக்கையாளர் கடைக்காரர் நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கயாவில் பைக் ஒன்று கடை வாசலில் லேசாக உரசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இளைஞர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ வைத்து தாக்குதல் ஏற்படுத்தினார். அது போல் முசாஃபர்பூர் அருகே பஸ் பயணக் கட்டணமாக கூடுதலாக 10 ரூபாய் கேட்டதற்கு நடத்துனருடன் தகராறு செய்த பயணி ஒருவர் பேருந்து நிலையத்திலேயே வன்முறையில் ஈடுபட்டார். அது போல் பாகல்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் ஆத்திரமடைந்த கும்பல் அந்த கடையில் இருந்த பொருட்களை தூக்கி போட்டு உடைத்து கடை உரிமையாளரையும் தாக்கியது. இது போல் பீகாரில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில் அது போன்றதொரு நிலை தற்போது தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.