விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தங்கமுனீஸ்வரன் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர் வீடு தேடி வந்து ஒரு பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்படி மிரட்டிய ரவுடியை தோழிகளுடன் சேர்ந்து பெண் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதுகுறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி விவரமாக பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையம்மன் கோவில் தெருவை சேர்ந்த 26 வயதாகும் தங்கமுனீஸ்வரன் தப்பு இசைக்கலைஞராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. தங்கமுனீஸ்வரனின் நடவடிக்கைகள் தவறாக இருந்த காரணத்தால், அவரை ரவுடி பட்டியலில் சேர்த்ததுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முன்பகை காரணமாக சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்த சோனைமுத்துவின் மனைவியான 40 வயதாகும் மருதாயி (40) என்பவருடன் மோதல் போக்கில் இருந்து வந்தாராம். கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்த மருதாயி, ஏற்கனவே அளித்த புகாரின்பேரில் தங்கமுனீஸ்வரன் கைது செய்யப்பட்டு இருந்தார். என் மீது பொய் புகார் கொடுத்து சிறையில் அடைத்த உன்னை சும்மா விடமாட்டேன் என்று தங்கமுனீஸ்வரன் மிரட்டி வந்தாராம். இந்த சூழலில் தங்கமுனீஸ்வரன் தனது நண்பர்கள் 2 பேருடன் மருதாயி வீட்டுக்கு சென்றுள்ளார். நண்பர்களை வெளியே நிற்க வைத்துவிட்டு, நான் கூப்பிடும்போது மட்டும் வந்தால் போதும் என்று கூறிவிட்டு வீட்டின் உள்ளே தங்கமுனீஸ்வரன் மட்டும் சென்றுள்ளாராம். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த மருதாயி மகன் வீட்டின் கதவை பூட்டி உள்ளார். இன்னொரு அறையில் இருந்த முத்துமாரி என்ற பெண் சமையல் அறையில் இருந்து ஓடிவந்து மிளகாய்பொடியை தங்கமுனீஸ்வரன் மீது வீசினாராம். மிளகாய் பொடி கண்ணில் பட்டதால் நிலைதடுமாறிய தங்கமுனீஸ்வரனை மருதாயி மற்றும் இவருடைய தோழிகள் ரம்யா, ஈஸ்வரி, நண்பர் செல்வகுமார் உள்ளிட்டோர் சேர்ந்து கத்தி, அரிவாளால் வெட்டியும், குத்தி உள்ளார்கள். இதில் தங்க முனீஸ்வரன் அந்த வீட்டிலேயே இறந்தார்.. இந்த கொலை தொடர்பாக மருதாயியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னரே தோழிகள் உள்பட 6 பேர் சேர்ந்து தங்கமுனீஸ்வரனை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. நயன்தாரா,யோகிபாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படம் பாணியில் சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமார் (37), ரம்யா (35), முத்துமாரி (55), ஈஸ்வரி (39), மருதாயின் மகன் என மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.