விருதுநகர் போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்! தவெக நிர்வாகி முத்துவேல் இடைநீக்கம்

  • விருதுநகர்: விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததை ரீல்ஸ் போட்ட தவெக ஒன்றியச் செயலாளர் முத்துவேல் கட்சியில் இருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Advertisement

    தமிழகம் முழுக்க கடந்த சனிக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரவர் பகுதிகளில் நடந்த முகாம்களில் கலந்து கொண்டனர்.

    அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலும் சொட்டு மருந்து முகாம் நடந்தது. சின்னமூப்பன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இந்த முகாமில் விருதுநகர் மாவட்டம் புல்லலக்கோட்டையைச் சேர்ந்த முத்துவேல் என்பவர், அந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்றிருந்தார்.

    அங்கு மருத்துவ பணியாளரிடம் ஆய்வு செய்ய வந்துள்ள மக்கள் பிரதிநிதி போல விவரங்களை கேட்டு முதல்வர் விஜய் நடித்த படத்தின் பாடலை பின்னணியில் ஒலிக்கப்பட்டு அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்தார்.

    Advertisement

    முறையான பயிற்சிகள் ஏதும் இல்லாமல் முகாமிற்கு வந்திருந்த குழந்தைக்கு தன் கையால் சொட்டு மருந்து கொடுத்ததுடன் அதையும் வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் பிரதிநிதிகளை தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் ஆய்வு செய்யக் கூடாது என அமைச்சர்கள் தெரிவித்திருந்தும் முத்துவேல் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினர் இதை கையில் எடுத்துக் கொண்டு கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

    ஏற்கெனவே தவெக பெரும்பான்மை இடங்களில் வென்று கூட்டணியுடன் ஆட்சியை பிடித்ததும் தவெக நிர்வாகிகள் பலர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு செல்வது, அங்கிருந்த மருத்துவர்களை மிரட்டியது என தகவல்கள் வெளிவந்த போது அமைச்சர் ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    அதில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் இது போல் ஆய்வு செய்யக் கூடாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விருதுநகர் ரீல்ஸ் போட்ட விவகாரத்தில் பணியில் இருந்த சுகாதாரத் துறை பணியாளர்களிடம் விளக்கம் கேட்க போது முத்துவேல் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

    இந்த நிலையில் முத்துவேலை 3 மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக உத்தரவிடப்பட்டது. ஏற்கெனவே உத்தரமேரூரில் பள்ளி மாணவர்களிடம் விஜய் போட்டோவை காட்டி அவர் யார் என கேட்டு படிப்புக்கு இடையூறு செய்ததாக ஒரு ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TVK Activist Muthuvel was interim suspended from the party for posting reels taken at Virudhunagar polio drops camp.