மாமா வேணாம்..ம்மா.. 21 வயது வர்ஷா.. 31 வயது யுவராஜ்.. விருதுநகர் குடும்பத்தை முடித்த மாப்பிள்ளை

  • விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பண்ணி வருகிறது.. பரஸ்பர புரிதலும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தால் எந்தவொரு திருமண பந்தத்தையும் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். ஆனால் இங்கே அப்படியில்லை.. அநியாயமாக ஒரு உயிர் போயுள்ளது.. என்ன நடந்தது காரியாப்பட்டியில்?

    Advertisement

    காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி பெயர் விநாயகஜோதி.. 45 வயதாகிறது.. இவர்களது 21 வயது மகள் வர்ஷா.

    Advertisement

    வர்ஷாவுக்கு முத்துக்குமாரின் அக்கா மகன் யுவராஜா (32) என்பவரை திருமணம் செய்ய குடும்பத்தினர் விரும்பினார்கள்.. சொந்த மாமன் மகள் என்பதால் வர்ஷாவிற்கும் யுவராஜாவிற்கும் திருமணம் என்பதில் உறவினர்களுக்கும் பயங்கர சந்தோஷம்.. அதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 வீட்டு உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    விருதுநகர் முறைமாமன்

    ஆனால், வர்ஷாவிற்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை போல தெரிகிறது. "எனக்கு யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை" என்று வர்ஷா தனது பெற்றோரிடம் உறுதியாகவே சொல்லி உள்ளார்.. வர்ஷா இப்படி சொல்வார் என்று 2 குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடும் மோதலும் வெடித்தது.

    Advertisement

    இதற்கு நடுவில், தனக்கு எங்கே திருமணம் நின்றுவிடுமோ என்ற பயத்தில் யுவராஜா டென்ஷனாகி விட்டார்.. இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

    துணி துவைத்து கொண்டிருந்த வர்ஷா

    அப்போது கையில் அரிவாளை மறைத்து வைத்து வைத்து கொண்டு யுவராஜா அங்கு திடீரென வந்துள்ளார். வர்ஷாவிடம் தன்னை ஏன் திருமணம் செய்ய மறுக்கிறாய் என்று தகராறு செய்த யுவராஜா, அரிவாளாலேயே வர்ஷாவை சரமாரியாக வெட்டி விட்டார்.. இதில் வர்ஷா ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில்தான் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வர்ஷாவின் அம்மா விநாயகஜோதி வீடு திரும்பினார். வாசலில் தன்னுடைய மகள் ரத்த வெள்ளத்தில் வெட்டப்படுவதைப் பார்த்து அலறியடித்து கொண்டு வந்தார்.. ஆனால் வர்ஷாவை கொன்று விடுவது என்ற முடிவுடன் அவரை மீண்டும் வெட்ட முயன்றார்.. அப்போது மகளை காப்பாற்ற ஓடிவந்த விநாயகஜோதியையும் அரிவாளாலேயே வெட்டினார் யுவராஜா..

    Advertisement

    ஆத்திரம் அடங்காத யுவராஜ்

    இதில் பலத்த காயமடைந்த விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த வர்ஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலறிந்து வந்த மல்லாங்கிணறு போலீசார், விநாயகஜோதியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். அத்துடன் யுவராஜையும் தேட துவங்கினார்.

    வயசுதான் காரணமா

    ஆனால் அதற்குள், தான் பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார் யுவராஜ்.. போலீசார் அவரை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    Advertisement

    வர்ஷாவுக்கு 21 வயதாகிறது.. மணமகனான யுவராஜ்க்கு 31 வயதாகிறது.. இந்த வயது வித்தியாசம் காரணமாக திருமணம் வேண்டாம் என்று வர்ஷா தனது பெற்றோரிடம் சொல்லி வந்தாராம்.. அப்போதே மகளின் வார்த்தைக்கு மதிப்பு தந்திருந்தால், இன்று ஒரு உயிர் போயிருக்காது.

    பிள்ளைகளின் வயது வித்தியாசத்தையும் அவர்களின் தயக்கத்தையும் புரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி நிச்சயிக்கும் திருமணங்கள், இறுதியில் இப்படிப்பட்ட கொடூரமான ரத்த கறையோடுதான் முடிகின்றன என்பது வேதனையான விஷயம்... உறவை விடவும், சொந்த பந்த கவுரவத்தை விடவும், பிள்ளைகளின் விருப்பமே முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணராதவரை, இதுபோன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நம்மால் தடுக்கவே முடியாது..!

    English Summary

    Virudhunagar Family Murder.. Was the Age Gap Behind Yuvaraj's Deadly Attack?