விருதுநகர்: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரை தவெக எம்எல்ஏ செல்வம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது விருதுநகர் வழியாக மதுரை செல்கிறது. இந்த நிலையில் இன்று இந்த பேருந்தில் ஏற சென்ற பெண்களிடம் தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும், எங்கே செல்கிறீர்கள் என கேட்டனராம்.
அதற்கு அவர்கள் விருதுநகர் என்றனராம். விருதுநகரா இது போகாது, மதுரைதான் போகும் என்றனராம். ஆனால் பேருந்தின் டிஸ்பிளேயில் விருதுநகர், மதுரை என போடப்பட்டிருந்ததால், விருதுநகர் என போட்டுவிட்டு போகாது என்றால் என்ன அர்த்தம் என அந்த பெண்கள் கேட்டனராம். அப்போது டிரைவரும் கன்டக்டரும் அந்த பெண்களை முறைகேடாக பேச தொடங்கினராம். இதனால் அவர்கள் வீடியோ எடுத்தனர். அப்போது அந்த பெண்களிடம் "வார்த்தையை விடாதே," என இருவரும் பேசினராம். அப்போது போர்டில் போட்டுவிட்டு ஏன் விருதுநகர் போகாது என்கிறீர்கள் என கேட்டதற்கு அந்த டிரைவரும் கன்டக்டரும், "விருதுநகர் எல்லாம் போக முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றனராம். இந்த வீடியோவை அந்த பெண்கள் சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்தனர். இது விருதுநகர் தவெக எம்எல்ஏ செல்வத்தின் பார்வைக்கு சென்றது. இதுகுறித்து தகவலறிந்த தவெக எம்எல்ஏ செல்வம், பேருந்து நிலையத்திற்கு சென்று அந்த டிரைவர், கன்டக்டரை அழைத்து, "விருதுநகர்னு போர்டு போட்டால் பேருந்தில் ஏறணுமா ஏறக் கூடாதா" என கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும் "இல்லை சார், வண்டி கிளம்பும் போது ஏறிக் கொள்ளட்டும் என்றுதான் சொன்னோம்" என்றனர். உடனே அவர்கள் பேசிய வீடியோவை காட்டிய எம்எல்ஏ, "எங்க நீ இதுல அப்படியா பேசியிருக்க?, உன்னால் விருதுநகர் போக முடியும்னா வேலை பார், இல்லாவிட்டால் விட்டுட்டு போயிடு! உன் வீட்டு பெண்களாக இருந்தால் இப்படித்தான் பேசுவியா? உனக்கு அப்படி பேசுற உரிமையை யார் கொடுத்தது? அவர்களே பேசியிருந்தாலும் உனது மேனேஜரிடம்தானே சொல்லணும், பொதுமக்களிடம் பதிலுக்கு வரிந்து கட்டுவியா? போன மாசமும் இதே போல் ஒரு பிரச்சினை, இந்த மாசம் இன்னொரு பிரச்சினை! இப்படியே போச்சுன்னா பஸ் லைசன்ஸ்ஸை கேன்சல் செய்துடுவேன். விருதுநகருக்கு போகாவிட்டால் போர்டில் எதற்காக போடுகிறீர்கள் என கேட்டார். மேலும் தனியார் பேருந்து நிர்வாகத்தை தொடர்பு கொண்ட செல்வம், "இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்" என கேட்டார், அதற்கு எதிர்முனையில் பேசிய நபர், "வண்டியை விட்டு இருவரையும் இறக்கிவிடுங்கள்" என்றாராம். அதற்கு செல்வம், "வண்டியை விட்டு இறக்கினால் வேறு ஒரு நாள் இப்படிதான் பேச போகிறார்கள், ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யுங்கள். மேலும் அனைத்து பேருந்து டிரைவர்கள், ஓட்டுநர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்றார். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது அந்த இருவரும் குழந்தை குட்டி இருக்கிறது என்றனர். அதற்கு செல்வம், "ஏன் லேடீஸ் கிட்ட முறைத்தவறி பேசுனியே அப்போது உனக்கு குடும்பம் குட்டினு நியாபகம் வந்திருக்கணும்" என்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் எம்எல்ஏவாக இருந்தாலும் டிரைவர், கன்டக்ரை ஒருமையில் பேசுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விகளும் எழுகின்றன.போர்ட்டில் இருக்குல்ல?
விருதுநகர் , மதுரை
பிரச்சினை
சஸ்பெண்ட்