விருதுநகர் சிவகாசி அதிர்ச்சி.. செல்போனுக்காக 3 வயது சிறுவனின் கழுத்தில் கத்தி வைத்த 14 வயது சிறுமி

  • விருதுநகர்: ஆசைப்பட்ட செல்போனை வாங்கித் தரவில்லை என்ற கோபத்தில், 3 வயது சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து 14 வயது சிறுமி மிரட்டிய சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை உயிருடன் விடவேண்டுமானால், தான் விரும்பிய மொபைல் போனை வாங்கித் தர வேண்டும் என சிறுமி கறார் காட்டியதை பார்த்து, போலீசாரும் உறவினர்களும் அரண்டு போய் விட்டார்கள்..!!

    Advertisement

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது.. தாயை இழந்தவர்.. அதனால் தன்னுடைய சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்..

    Advertisement

    விருதுநகர் சிவகாசி சிறுமி

    இந்நிலையில், நேற்றிரவு சித்தியின் 3 வயது பேரனை தூக்கிக்கொண்டு, படுக்கையறைக்கு சென்றாள் சிறுமி.. இரவு 8 மணியளவில் ரூமுக்குள் சென்ற சிறுமி, கதவையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறக்கும்படி சொல்லியுள்ளனர்.. ஆனால், கதவைத் திறக்காத சிறுமி, சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட தொடங்கி விட்டாள்.

    நான் கேட்ட செல்போன் எங்கே? எனக்கு பிடித்த அந்த மாடல் போனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால், இந்த குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவேன் என்று கூறியிருக்கிறாள்.. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிறுமியை சமாதானப்படுத்தி குழந்தையை மீட்கப் பலமுறை முயன்றனர். ஆனாலும், சிறுமி தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லை.

    Advertisement

    இரவு முழுவதும் போராட்டம்

    சொந்தக்காரர்கள் எவ்வளவோ முயன்றும் சிறுமி கதவை திறக்கவில்லை.. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீசார், சிறுமியிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், செல்போன் தந்தால் மட்டுமே குழந்தையை தருவேன் என்று கறார் காட்டியிருக்கிறாள்.

    குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதால் போலீசாரும் இதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். சிறுமி கேட்ட குறிப்பிட்ட செல்போனை வாங்கி தருவதென போலீசார் முடிவு செய்தனர். ஆனால், இரவு நேரமாகிவிட்டதால், ஒவ்வொரு செல்போன் கடை உரிமையாளருக்கும் போனை போட்டு பேசினார்கள்..

    Advertisement
    பட்டா மாறுதல், நில அளவீடு.. சிவகாசி, சிட்லப்பாக்கத்தில் சிக்கிய அரசு அதிகாரிகள்.. 9000க்காக அசிங்கம்

    2 மணிக்கு கிடைத்த போன்

    ஒருவழியாக, சிறுமி கேட்ட அந்த குறிப்பிட்ட மாடல் மொபைல் போன் கிடைத்தது.. அதற்குள் அதிகாலை 2 மணியாகிவிட்டது.. எனினும் 2 மணிக்கு சிறுமியிடம் அந்த செல்போன் கொடுக்கப்பட்டது. மொபைல் போன் கையில் கிடைத்த பிறகுதான் சிறுமி, அந்த குழந்தையை விடுவித்துள்ளார். இதையடுத்து பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

    இதுகுறித்து டிஎஸ்பி அனில்குமார் சொல்லும்போது, "3 வயது குழந்தையை மீட்கப் பலமுறை முயற்சி செய்தும் சிறுமி கதவைத் திறக்கவில்லை.. குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தபடியே மொபைல் போன் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.. இரவு முழுவதும் முயற்சி செய்து, சிறுமி கேட்ட போனை வாங்கிக் கொடுத்த பிறகே குழந்தையை விடுத்தார்" என்றார்.

    Advertisement

    குழந்தைகளின் பிடிவாதம்

    இந்த சம்பவம் பல்வேறு கலக்கங்களை, பெற்றோர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.. குழந்தைகள் மொபைல் போனில் தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது அவர்களின் மனநிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, செல்போன் மீது அதிக ஈடுபாடு ஏற்படும்போது, அது கிடைக்காத சமயங்களில் குழந்தைகளிடம் கோபம், பிடிவாதம் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    குழந்தைகள் கேட்பதையெல்லாம் உடனடியாக வாங்கிக் கொடுப்பதும், அவர்கள் அடம்பிடிக்கும்போதெல்லாம் விட்டுக்கொடுப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. சில விஷயங்களைப் புறக்கணிக்கவும், ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் சிறு வயதிலிருந்தே குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

    அதீத செல்லம் குழந்தைகளைப் பலவீனமாக்குவதுடன், தாங்கள் கேட்பதெல்லாம் கிடைத்துவிடும் என்ற மனநிலையையும் உருவாக்கிவிடும். இதனால் எதிர்பார்த்தது கிடைக்காதபோது ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் விபரீதமான செயல்களில் ஈடுபடக்கூடும். அதனால், குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டைக் கண்காணிப்பதுடன், அவர்களின் உணர்வுகளையும் பெற்றோர் புரிந்துகொண்டு உரிய வழிகாட்டுதல் வழங்குவது அவசியம்...!!

    English Summary

    Virudhunagar Shocker.. 14-Year-Old Girl Holds Knife to 3-Year-Old Boy's Neck Over a Mobile Phone in Sivakasi