வாஷிங்டன்: உலகின் பல்வேறு நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு என்பது தீவிரமாக நடந்து வருகிறது. ஏஐ வந்த பிறகு அதில் முதலீடுகளை அதிகரித்து செலவுகளை குறைக்க பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். அப்படி தான் அமேசான் நிறுவனத்தில் இருந்து சுமார் 250 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை வந்த மெயிலில் அவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தனது நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதன்கிழமை அந்நிறுவனத்தின் Devices யூனிட் என்ற பிரிவில் பணியாற்றிய 250 ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கிண்டில் இ-ரீடர்கள், எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட கருவிகளை கையாளும் இந்த பிரிவில், குறிப்பாக சாப்ட்வேர் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலையில் இந்த ஊழியர்களுக்கு திடீரென மெயில் மற்றும் மெசேஜ் சென்றுள்ளது. அதில் தான் பணி நீக்கம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் துணை தலைவர் செரி ராபின்சன் பெயரில் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தியதாகவும், அதன் முடிவில் சில பணியிடங்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் நலனை கருத்தில் கொண்டு சில பணியாளர்களை நீக்குவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம் என்று அமேசான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், 250 பேர் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் திறமையாக மேற்கொள்ளவும், எதிர்கால திட்டங்களுக்கு ஏற்ப ஊழியர்களின் கட்டமைப்பை சீரமைக்கவும் முடியும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. ஏஐ வருகைக்கு பிறகு தொழில்நுட்ப பிரிவில்,. அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் டெவலப்பர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முந்தைய நாள், அதாவது புதன்கிழமை அமேசான் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இது குறித்து விளக்கி இருந்தனர்.. அதில் டெவலப்பர்கள் AI மாற்றத்தை ஏற்று கொண்டு புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் பின்னுக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாப்ட்வேர் டெவலப்மேண்டில் ஏஐ மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வந்த மறுநாளே ஆட்குறைப்பை அமேசான் நடத்தியுள்ளது. ஆட்குறைப்பு நடந்த அதே நாளில்.. அமேசான் அலெக்சாவுடன் இயங்கும் ஐந்து புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தியது. மறுவடிவமாக்கப்பட்ட எக்கோ ஷோ 16 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, அலெக்சா போட்டோ ஃபிரேம், எக்கோ டைம் படுக்கையறை வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் இதில் இடம்பெற்றன. இவை அனைத்தும் வேலை நீக்கப்பட்ட அமேசானின் சாதனங்கள் பிரிவால் உருவாக்கப்பட்டவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.. அமேசான் நிறுவனத்தை பொறுத்தவரை ஆட்குறைப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் தான் அமேசான் நிறுவனத்தின் சில்லறை வணிக பிரிவில் சுமார் 1,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபரில் 14,000 ஊழியர்களை நீக்கிய அமேசான், இந்த ஆண்டு ஜனவரியில் மேலும் 16,000 பணியிடங்களை குறைப்பதாக அறிவித்திருந்தது. ஆட்களை குறைக்கும் அதேநேரம் AI தொழில்நுட்பத்தில் அமேசான் மிக பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் அந்நிறுவனம் AI துறையில் 220 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்குறைப்பு என்பது ஏதோ அமேசான் நிறுவனத்தில் மட்டும் நடப்பது இல்லை. உலகெங்கும் உள்ள அனைத்து டெக் நிறுவனங்களிலும் இதே நிலை தான் இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் தொழில்நுட்ப துறையில் இருந்து இதுவரை 1.35 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். மைக்ரோசாப்ட் தொடங்கி பல டாப் நிறுவனங்கள் ஆட்களை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதிகாலை வந்த மெயில்
250 பேருக்கு வேலை போச்சு
மறுநாளே பணிநீக்கம்
5 கருவிகள்
தொடரும் பணிநீக்கம்