வாஷிங்டன்: அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் பணியாற்றி வரும் இந்தியரிடம், ''நீங்கள் முஸ்லிமா?'' என்று ஒரு நபர் கேட்டார். அதற்கு அவர் ''இந்தியாவை சேர்ந்த முஸ்லிம்'' என்று பதிலளித்த அடுத்த நொடியே அந்த நபர் 15 முறை கத்தியால் சரமாரியாக குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வஞ்சிக்கப்படுவதோடு, தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் நடவடிக்கை எடுத்தாலும் கூட ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு இதுபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. இநத திடுக்கிட வைக்கம் சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: இந்தியாவை சேர்ந்தவர் சோஹைல். இவர் அமெரிக்காவின் உட்டா நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இந்த ஷாப்பிங் மாலிற்கு சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்றார். அவர் சோஹைலிடம் சென்று, ''நீங்கள் முஸ்லிமா?'' என்று கேட்டார். அதற்கு சோஹைல், ''ஆம்'' என்று கூறினார். இதையடுத்து சற்றும் யோசிக்காத அந்த நபர் சோஹைலை சரமாரியாக கத்தியால் குத்தினார். மொத்தம் 15 முறை கத்தியால் குத்திவிட்டு ஓடினார். இதில் சோஹைல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சோஹைலை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி நேரில் பார்த்தவரான மாலில் உள்ள நகை கடையில் பணியாற்றி வரும் அவரது தோழி லுனா கூறுகையில், ''அந்த நபர் சோஹைலிடம் ''எந்த ஊர்'' என்று கேட்டார். அதற்கு சோஹைல், ''இந்தியா என்றும் தனது பெயர் சோஹைல்'' என்றும் கூறினார். அதற்கு அந்த நபர், ''நீங்கள் முஸ்லிமா'' என்று கேட்டார். சோஹைல், ''ஆம்'' என்றதும் கத்தியால் குத்த தொடங்கினார்'' என்று சம்பவம் பற்றி எடுத்து கூறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாலில் இருந்து தப்ப முயன்ற நபரை அங்கிருந்தவர்கள் விரட்டி பிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பீட்டர் மைக்கேல் லார்சன் என்பதும், வயது 48 என்பதும் தெரியவந்தது. இவர் முஸ்லிம் மீது வெறுப்பு கொண்ட நபராக உள்ளார். முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சுற்றி திரிந்த நிலையில் சோஹைலை கத்தியால் குத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சால்ட் லேக் கவுண்ட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சோஹைலின் சிகிச்சைக்கு நிறைய பணம் தேவையாக உள்ளது. சில முக்கிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளது. இதனால் அவரது தோழி லுனா சார்பில் GoFundMe என்ற பக்கம் தொடங்கப்பட்டு பணம் நன்கொடையாக திரட்டப்பட்டு வருகிறது. இதுபற்றி லுனா கூறுகையில், ''சோஹைலுக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பது எனக்கு தெரியும். அவருக்கு 2 குழந்தகள் மற்ம் மனைவி உள்ளனர். அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் சோஹைலின் குடும்பமே அவரது உழைப்பில் தான் உள்ளது. சோஹைல் மீதான தாக்குலை தடுக்க நான் ஷு, சேர் என கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து வீசினேன். ஆனால் தாக்குதல் நடத்திய நபர் மிகவும் ஆக்ரோஷமாக சோஹைலை குத்தினார். உண்மையில் சோஹைல் இறந்துவிடுவார் என்று தான் நினைத்தேன். நல்ல வேளை சிகிச்சையில் உள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்ட உதவி கோரி வருகிறேன். ''என்றார். இதுபற்றி சேஹைலின் மேனேஜர் அட்னான் முகமது கூறுகையில், ''நான் அவரை பாதுகாப்பு வழங்குவேன். என்னுடைய உயிரை கொடுத்தாவது அவரை காப்பாற்றுவேன். சோஹைலின் உயிரை மாலில் இருந்தவர்கள் தான் காப்பாற்றி உள்ளனர். இன்னும் கூட மனிதநேயம் உயிர்ப்புடன் உள்ளது. அவர்களுக்கு நன்றி'' என்றார்.