வாஷிங்டன்: ''ஈரான் நாட்டின் எஞ்சிய பகுதிகளை அழிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்'' என்று ஈரான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வார்னிங்கை செய்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடைக்கால தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் பிரநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டிலும் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று கைப்பற்றியது. டிரம்பின் இந்த தேர்தல் தோல்விக்கு ஈரான் மீதான அவரது போர் நடவடிக்கை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஈரான் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் அமெரிக்காவில் டீசல் விலை உச்சமடைந்தது. இதனால் விரக்தியில் பலரும் டிரம்புக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. தற்போது தேர்தலில் தோற்றுவிட்டார். இனியாவது டிரம்ப் அமைதியாக இருப்பார். ஈரானை தாக்கமாட்டார் என நினைக்கும் வேளையில் தான் டிரம்ப் புதிய மிரட்டலை ஈரானுக்கு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: '' எங்களின் அனுமதியின்றி ஈரானால் அணுஆயுதம் செய்யவே முடியாது. ஈரானின் எஞ்சிய பகுதிகளை அழிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் சூழ்நிலைகள் கரணமாக அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது நடந்தால் ஈரான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 25 ஆண்டுகள் வரை ஆகும். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி விரைவில் தெரியவரும்'' என்று வார்னிங் செய்துள்ளார். இது ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஈரான் நாட்டின் கண்டிஷன்களுக்கு அமெரிக்கா மறுக்கிறது. ஈரான் மீதான பொருளாதார தடைகள், முடக்கப்பட்ட ஈரான் சொத்துகளை விடுவித்தால், அமெரிக்காவால் ஏற்பட்ட இழப்பீடுகளை தருதல் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா தயங்கி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் இழுபறியில் இருப்பதோடு, இருநாடுகள் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.