வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும் எல் நினோ நிகழ்வு, சூப்பர் எல் நினோ நிகழ்வாக மாறி இருப்பதாக பல்வேறு உலக நாடுகளின் வானிலை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இதனால் உலக அளவில் வானிலை அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய பெருங்கடலில் உருவாகி வரும் பாசிட்டிவ் இந்தியன் ஓசன் டைபோல் நிலையும் கைகோர்த்து செயல்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
இதனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு, அதீத மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் போது உருவாகும் இயற்கையான வானினை நிகழ்வு எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது கடலின் வெப்பநிலையை மட்டும் மாற்றாமல் உலக அளவில் வானிலை அமைப்பிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் அங்கிருந்து உருவாகும் காற்றின் சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளை மழைப் பொழிவு மற்றும் வளிமண்டல இயக்க மாற்றம் ஏற்படும். இது பசிபிக் பெருங்கடல் மட்டுமல்லாது உலகின் பல்வேறு கண்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு அமெரிக்காவில் கடுமையான மழை, வெள்ளம், சூறாவளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால், இந்தியாவில் அதிக வெப்பம், வறட்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தற்போது பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் 2026 எல் நினோ மிக வேகமாக வலுப்பெற்று வருகிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பி ( NOAA) கடந்த ஜூன் 11ஆம் தேதி எல் நினோ நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கு பின்னரும் கடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இது காட்ஸில்லா எல் நி னோ அல்லது சூப்பர் எல் நினோ நிலையை அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, எல் நினோவின் வலிமையை கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் Niño 3.4 பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 1997-98 காலகட்டத்தில் பதிவான வலுவான எல் நினோவின் உச்சநிலையுடன் ஒப்பிடும்போதும் தற்போதைய வெப்பநிலை அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், இந்த ஆண்டு உருவாகி வரும் எல் நினோ மிகவும் வலுவாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு வரை அதிகபட்ச வெப்பநிலையை இந்த கடல் பரப்பு எட்டும் என்பதால், 2027 இதுவரை இல்லாத அளவு வெப்பமான ஆண்டாக இருக்கும் என்கின்றனர் சில வானிலை ஆய்வாளர்கள். இந்தச் சூழலில் தான் இந்திய பெருங்கடலில் பாசிட்டிவ் இந்தியன் ஓசன் டைப்லோ உருவாகி வருவது வானிலை ஆய்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் கடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் கிழக்குப் பகுதியில் இயல்பை விட குறைவாகவும் மாறும் நிலை பாசிட்டிவ் ஐஓடி எனப்படுகிறது. இந்த நிலை வரும்போது இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவில் முற்றிலும் மாற்றம் ஏற்படலாம். இந்த பாசிட்டிவ் ஐஓடி சில நேரங்களில் இந்தியாவுக்கு அதிகமான மழைப்பொழிவை தரும். ஆனால் எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருக்கிறது. இதனால் பாசிட்டிவ் ஐஓடி காரணமாக தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். அதே நேரத்தில் எல் நினோ மழையை குறைக்குமா அல்லது பாசிட்டிவ் ஐஓடி இந்தியாவுக்கு மழையை அதிகரிக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் இது நிச்சயம் ஒரு கவலை தரக்கூடிய நிலை என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் வரை எல் நினோ வலுவாக இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் நிச்சயம் பிரச்சனை ஏற்படலாம். சர்வதேச வானிலை மையங்களின் பல்வேறு மாதிரிகளை ஒருங்கிணைத்து பார்க்கும்போது, முக்கிய பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை விலகல் 2.9 டிகிரி செல்சியஸை தாண்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சில தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளில் இது 3 டிகிரி செல்சியஸையும் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.எல் நினோ
சூப்பர் எல் நினோ
வெப்பநிலை
இந்தியன் ஓசன் டைப்லோ
அதிக மழைப்பொழிவு
பாசிட்டிவ் ஐஓடி
கடல் மேற்பரப்பு