அமெரிக்க மண்ணில் ராஜேந்திர சோழனின் பெருமை.. திரும்பி பார்க்க வைத்த தமிழர் கலாசார விழா!

  • வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 4ஆம் தேதியோடு வரும் விடுமுறை நாட்களில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை FeTNA நடத்தும் தமிழ் விழாவில் கலந்து கொள்வது என்பது, வட அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் புனிதப் பயணமாகவே மாறிப் போனது. ஆம் இது தமிழ் மொழி, கலை, இலக்கியம், போட்டி, வணிகம், படைப்புத் திறன் சார்ந்த புனிதப் பயணம். சிறுவர் முதல் பெரியவர் வரை, புலம்பெயர்ந்தவர்கள் வடஅமெரிக்காவில் வாழ்ந்தாலும், இங்குள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளி தமிழ்.

    Advertisement

    இந்த 2026 ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) உடன் நியூசெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து, நியூஜெர்சி நகரில் கடந்த ஜீலை 2,3,4 ஆம் தேதிகளில் மூன்று நாட்கள், தமிழ் விழா எடுத்தது. சுமார் 3000 அதிகமானோர் பங்கு கொண்ட விழாவில், பல்வேறு துறை சார்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தாலும், அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது என்றால் அது கடைசி நாள் நடைபெற்ற தமிழரின் மரபுக் கலைகள் என்ற கலை நிகழ்ச்சியில் தான் என்றால் மிகையல்ல.

    Advertisement


    இந்த 2026 ஆம் ஆண்டு பேரவை விழா'39 இன் மையக்கருவான நாடு கடந்தும் தமிழ் மொழி வளர்ப்போம், இராஜேந்திரச் சோழனின் கடாரம் வென்ற 1000 ஆவது வெற்றி ஆண்டு என்ற இந்த இரண்டையும் கொண்டு "கடாரம் கொண்டான் காணும் தமிழரின் மரபுக்கலைகள்" என்ற தலைப்பில் மேடை ஏற்றியது சிறப்பு. இதில் அமெரிக்காவில் வாழும் சுமார் 150 பேர், 10 மரபுக் கலைகளைக் கடந்த 4 மாதமாகக் கடினமாகப் பயிற்சி எடுத்து மேடையேற்றினார்கள்.

    தமிழ் குறு நாடகம்

    ஆயிரம் ஆண்டிற்கு முன்பு கடாரத்தை வெற்றி கொண்டு திரும்பும் இராஜேந்திரச் சோழனைத், தமிழ் நாட்டில் வாழும், ஒவ்வொரு பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கே உரிய சிறப்பான தமிழர்க் கலைகளை மன்னர் முன் ஆடிக்காட்டுகிறார்கள். அது கலைகளுக்குள் நடைபெறும் போட்டியாகவும், மன்னரை வரவேற்பது போன்றும் குறு நாடகத்திலிருந்து தொடங்கியது. தஞ்சையில் வாழும் வீர்மிக்க சிறுமி ஒருத்தி அரசரைப் பார்த்து கேள்வி கேட்கும் வகையில் நாடகம் சென்றது சிறப்பு. இதன் எழுத்து, ஆக்கம் சுந்தரமூர்த்தி ஆதியாகவேல்.

    Advertisement

    தமிழ்ப் பாடல் / நடனம்

    சோழர்களின் முக்கிய நகரான, காஞ்சிபுரத்து கோயிலில் பயிற்சி பெறும் நாட்டியக் கலைஞர்கள், தமிழ் மொழியின் சிறப்பைப் புகழ்ந்து பாடக்கூடிய பாடலுக்கு, பறை, துடும்பு, கொம்பு என்ற தமிழ் இசைக்கருவிகளை இசைக்க, சிறப்பாக சிறுவர்கள் ஆடிக்காட்டினார்கள். தமிழைப் பற்றி எக்காலத்தின் கவிஞர்கள் பாடினாலும், தமிழின் பெருமையும், சிறப்பும் ஒன்று தானே, மாறாதது தானே...என்ற வகையில் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலைத் தேர்வு செய்து, எழுச்சி மிக்க வகையில் சிறப்பாகப் பாடியிருந்தனர். பாடல், நடனப் பயிற்சி திருமதி. அனிதா இராஜகோபாலன்.

    Advertisement

    ஒயிலாட்டம்

    திருநெல்வேலிச் சீமை என்று சொல்லக்கூடிய நெல்லைக் கலைஞர்கள் ஒயிலாட்டத்தை ஆடிகாட்டினார்கள். இது தொடக்கத்தில் ஆடவர்களால் மட்டுமே ஆடப்பட்டுவந்த நடனம். "போர்ப்பயிற்சி ஆடல்" என்ற வகையில் அடங்கும் இந்த நடனம், சிலம்பப் பயிற்சியின் தொடக்கக் காலடி வைப்புகளுடன் தொடர்புடையது. கையில் ஒரு சிறு கைக்குட்டையைக் கொண்டு மேலும், கீழும், பக்கங்களிலும் ஒயிலாக அசைத்து, சலங்கை சத்தத்துடன் கூடி ஆடப்படுவதால், ஒயிலாட்டம் எனும் பெயர் பெற்றது. இந்த ஆட்டத்தை பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர் திருமதி. நிர்மலா பாண்டிதுரை

    கழியலாட்டம்

    தமிழர்களுக்கு வெற்றியின் அடையாளமாக பல பாடல்களும், குறியீடுகளும் உண்டு. ஆனால் ஆடல் ஏதேனும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது என்று கழியல் ஆட்டத்தை ஆடிக்காட்டியது தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கன்னியாகுமரி மக்கள். இந்த ஆட்டம் வீரத்தின் மொழி, போரில் வெற்றி பெற்ற மன்னரையும், வீரர்களையும், கொண்டாட ஆடப்படும் ஆட்டமாகும். முன்பு யானைத் தந்தங்களை இரு கைகளிலும் பிடித்து இசை எழுப்பி ஆடிய இந்த ஆட்டம் இப்போது மூங்கில் கழிகளைக் கொண்டு ஆடப்படுகிறது, கழியின் இசையோடு, மன்னரின் பெருமையையும், முன்னோர்களின் பெருமையையும், வீர உணர்வுடனும், பாடலுடன் ஆடிக்காட்டினார்கள். கழியலாட்டத்தைப் பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர் திருமதி. காயத்ரி வெங்கடாசலம். பேரவை விழாவிற்காக எழுதி பாடியவர் நவீன்.

    Advertisement

    கம்பத்தாட்டம்

    சேர நாட்டுக் கிழக்குப் பகுதி மக்கள் ஒற்றுமையையும், முன்னோர் பெருமைகளையும் போற்றும் வகையில் ஆடிக்காட்டிய ஆடற்கலைதான், கம்பத்தாட்டம். இது, உடல் வலிமை, ஒத்துழைப்பு, தாள உணர்வு மற்றும் குழு ஒருமைப்பாட்டையும் உணர்த்துகிறது. தாளத்திற்கு ஏற்ற வகையில் ஒருசேர சிறப்பாக ஆடிக்காட்டினார்கள். கம்பத்தாட்டத்தை பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர் கார்த்திக் சுப்ரமணியம்

    கரகாட்டம்

    வைகைக்கரை நாகரீகம் பார்த்த, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து கலைஞர்கள் கரகாட்டத்தை ஆட வந்தார்கள். சிலப்பதிகாரம் போன்ற சங்க கால இலக்கியங்களில், கரகம் அதாவது குடம் வைத்து ஆடும் முறை 'குடக்கூத்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மாதவி ஆடிய 11 வகை ஆட்டத்தில் குடக்கூத்தும் ஒன்று. முன்பு, நீர், அரிசி நிரப்பி அலங்கரிக்கப்பட்ட குடங்களைத் தலையில் வைத்து ஆடிய மரபு, இன்று செம்பு மற்றும் பித்தளைக் கரகங்களாக மாறி, கிளி அலங்காரம் செய்து கரகாட்டமாக ஆடப்படுகிறது. மழை மற்றும் செழிப்பு வேண்டி கிராம தெய்வங்களுக்கும், திருவிழாக்களிலும், கரகம் எடுத்து ஆடும் வழக்கம் தமிழர்களின் பாரம்பரியமாகும். சக்தி கரகம் இறைவனுக்கும், ஆட்டக்கரகம் மன்னரையும், மக்களையும் மகிழ்விக்க ஆடப்படும் ஆட்டமாகும். மேடையில் ஆட்டக் கரகத்தின் முடிவில் சோழர்களின் புலிக்கொடியைத் தலையில் கரகத்துடன், படிக்கட்டில் ஏறிப் பறக்க விட்டதைப், பார்த்து, கரவொலி எழுப்பி அரங்கை அதிரச் செய்தார்கள்.. கரகாட்டத்தைப் பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர்கள் இராஜராஜேஸ்வரி காமராஜ், சங்கீதா செந்தில்வாசன், சுந்தரமூர்த்தி ஆதியாகவேல்!

    மாட்டுக்கொம்பாட்டம்

    நம் தமிழர்களின் வீரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டை, மாட்டுக்கொம்பாட்டமாக ஆடிக்காட்ட வந்தார்கள். மாட்டுக்கொம்புக்கு மஞ்சள் பூசி, மாலை சூட்டி கால்நடையைப் போற்றுவதும், உழவனின் உழைப்பைப் போற்றவதும் விழாவாக கொண்டாடுவதும் நம் தமிழர்களின் மரபு. வீரமும் துணிவும் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே வரவேண்டுமென்பதை வலியுறுத்தக் குழந்தைகளே ஆடிக்காட்டினார்கள். இந்த ஆட்டம் பார்த்தவர்களை மிகவும் மகிழ்வித்தது. மாட்டுக்கொம்பாட்டத்தைப் பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர் அம்பிகா விஸ்வநாதன்.

    சிலம்பாட்டம்

    பல கலை முன்னெடுப்புகளில் நம் தமிழர்களே முன்னோடி. அதில் முக்கியமான ஒன்று நமது தற்காப்புக்கலையான சிலம்பாட்டம். இக்கலையில் உள்ள நுணுக்கங்கள் பல நாடுகளுக்குச் சென்று, பல வடிவங்களைப் பெற்றுள்ளது, இன்றும் நமது கலையின் முன்னோர்களை அந்த நாட்டினர் தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

    கங்கை முதல் கடாரம் வரை வெற்றிக்கொடி நாட்டிய நமது மாமன்னன் இராஜேந்திர சோழனின் படையில், பல வீர மறவர்களின் உடல் வலிமைக்கு, அத்தகைய சிலம்பக்கலையே ஆதாரம். வேகம், வீரம், ஒழுக்கம், தன்னம்பிக்கை இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் தமிழரின் தொன்மைக் கலையான சிலம்பாட்டத்தை தமிழ்நாட்டின் மையப்பகுதியும், பெருமை மிகு உறையூர் என்று சொல்லக்கூடிய திருச்சி மக்கள் ஆடிக்காட்டினார்கள். சிலம்பாட்டத்தை பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர்கள் கீர்த்தனா கோபால், ராஜேஷ் நாராயணன்!

    பறை

    எல்லாத் தோல் கருவி இசைக்கும் தாய் இசையான தமிழர்களின் பறையிசை. மொழி கலை இலக்கியம் வணிகம் ஆகிய எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்கிய, பெருமை மிகு தமிழரின் தலைநகராம் தஞ்சையிலிருந்து ஆட வந்தார்கள்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிக்கு இலக்கணம் வகுத்து, அதில் வாழும் நிலத்தை ஐந்திணைகளாகப் பிரித்து ஐந்து திணைகளுக்கும் ஒவ்வொரு பறையை வகைப்படுத்தி இசைக்கலையை வளர்த்த தமிழரின் மரபில், தொண்டகப்பறை, ஏறுகோட்பறை, நெல்லரிப்பறை, மீன்கோட்பறை, துடிப்பறை, அறைப்பறை, சாப்பறை, போர்ப்பறை, வெற்றிப்பறை, பெரும்பறை என்று பலவகை உண்டு. மேடையேற்றிய பறையிசைக்கு மக்கள் அனைவரும் ஆடி மகிழ்ந்து கொண்டாடினார்கள். இப்பறையிசையைப் பயிற்றுவித்து ஒருங்கிணைத்தவர் இளங்கோ பால்ராஜ்.

    ஒயில் கும்மி

    நம் மரபின் உயிரோட்டமான 'ஒயில்கும்மி' நடனத்தை தமிழ்நாட்டின் வீரத்திற்கும் பண்பாட்டிற்கும் மகுடம் சூட்டும், கொங்கு மண்ணின் மக்கள் ஆடிக்காட்டினார்கள், இதில் ஆடும் ஆண்களும் பெண்களும் பாரம்பரிய ஆடை அணிந்து, கால்களில் சலங்கை கட்டி, தமிழ் மணம் மாறாமல், 'பண்' என்று அழைக்கப்படும் பண்ணாங்குக்கு ஏற்ப, தாளம் பிசகாமல் கையைத் தட்டி, வரிசையாக நின்று ஆடப்படுவது தான் ஒயில்கும்மி. கோவில் திருவிழாக்களிலும் அறுவடைப் பண்டிகைகளிலும் கூட்டு உழைப்பையும், மாறாத ஒற்றுமையையும் தலைமுறைகள் தாண்டி பறைசாற்றி வரும் உன்னதக் கலை. ஒயில்கும்மிக்கான பாடலை தமிழகத்திலிருந்து வந்திருந்த நவீன் அவர்கள் மேடையில் பாட, சுமார் 40 பெண்கள் அழகாக ஆடிக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்கள். ஒயில் கும்மிக்கான பயிற்சியையும், ஒருங்கிணைத்தவர்கள் ரேணுகா அர்ச்சுனன் பாலமுருகன், நவீன்.

    மரபுக்கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழும், பயிற்றுவித்த, ஒருங்கிணைத்த அனைவருக்கும் பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த தமிழ விழா'39 (FeTNA'39) ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் பாராட்டைத் தெரிவித்தனர்.

    English Summary

    Federation of Tamil Sangams of North America (FeTNA) 2026 festival in New Jersey brought together over 3,000 participants(அமெரிக்காவில் நடந்த தமிழ் சங்க நிகழ்ச்சி): Tamil Heritage function in USA.