அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்!

  • வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையே போடப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ரெடியாகியிருக்கிறது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்துக்காக காத்திருக்கிறது.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்களுக்குள் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதி உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட மிக நெருங்கி வந்துள்ளன.

    Advertisement

    இரு நாட்டு தூதரகக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து முக்கிய அம்சங்களையும் பேசி முடித்துவிட்ட போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இறுதி ஒப்புதலுக்காக இந்த ஒப்பந்த வரைவு தற்போது காத்திருக்கிறது. இதனை ஆக்சியோஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது.

    அதாவது, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20% பங்கைக் கொண்டுள்ள மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி இந்த ஒப்பந்தத்தின் மூலம் வணிகக் கப்பல்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகத் திறக்கப்படவுள்ளது.

    போர்ச் சூழல் காரணமாக இதுவரை விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் இருக்காது. மிக முக்கியமாக, இந்த வழித்தடத்தைக் கடக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் இருந்து ஈரான் எவ்வித சுங்கக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிபந்தனைக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

    Advertisement

    இந்த அமைதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த 30 நாட்களுக்குள், ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ராணுவத்தால் வைக்கப்பட்ட அனைத்துக் கடல்சார் கண்ணிவெடிகளையும் அவர்கள் முழுமையாக அகற்ற வேண்டும்.

    ஈரான் தனது எல்லையில் கப்பல் போக்குவரத்தைச் சீரமைப்பதற்கு இணங்க, கடந்த சில மாதங்களாக ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்திருக்கும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை படிப்படியாகத் தளர்த்தப்படும். அதே நேரத்தில், ஈரான் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு ஏதேனும் இடையூறு விளைவித்தால், அமெரிக்கக் கடற்படை தனது முற்றுகையை உடனடியாகத் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தற்காலிகப் போர்நிறுத்தம் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். இந்த 60 நாட்களில், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது, முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிப்பது மற்றும் அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்கா விவாதிக்கும். இதற்குப் பகரமாக, தான் ஒருபோதும் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முற்பட மாட்டேன் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும்.

    Advertisement

    ஆனால் இன்னும் இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் எஸ் சொல்லாமல் இருக்கிறார். இந்த ஒப்பந்த வரைவு தயாராக உள்ள நிலையிலும், வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் ஈரானுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான், ஆனால் ஈரான் முழுமையாகப் பணியவில்லை என்றால் எங்களின் ராணுவ ஆக்ஷன் மிகக் கொடூரமாக இருக்கும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிற்கு சாதகமான இறுதி கட்ட மாற்றங்களைச் செய்யவே ட்ரம்ப் இன்னும் தனது இறுதி ஒப்புதலை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

    Topics: #us #iran #trump

    English Summary

    As the temporary ceasefire agreement between Iran and the United States is nearing its expiration, a comprehensive ceasefire agreement has now been finalized. It awaits the signature of U.S. President Trump.