வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணையை முழுமையாக கண்ட்ரோலில் எடுத்து, அங்கு வரும் கப்பல்களுக்கு டோக்கன் போட்டு கட்டணம் வசூலிக்க ஈரான் யோசித்து வருகிறது. ஆனால் அப்படி மட்டும் ஏதாவது நடந்தால், மொத்த அரபு நாடுகளும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்கா வார்னிங் கொடுத்திருக்கிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான 'ஹார்முஸ் ஜலசந்தி' விவகாரத்தில் ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை இதுவாகும்.
அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தனது x பக்கத்தில், "ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்க அரசு சகித்துக் கொள்ளாது. குறிப்பாக, இந்தச் சுங்கக் கட்டண நடைமுறைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவும் அனைத்து தரப்பினரையும் அமெரிக்காவின் நிதி அமைச்சகம் மிகக் கடுமையாகக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் என்பதை ஓமன் நாடு தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குத் துணை நிற்கும் கூட்டாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். சுதந்திரமான உலக வர்த்தகப் போக்குவரத்தை முடக்க ஈரான் எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் உலக நாடுகள் அனைத்தும் உடனடியாக நிராகரிக்க வேண்டும். இப்பிராந்தியத்தையும் உலகையும் ஈரான் பயமுறுத்தி வந்த காலம் இனி முடிந்துவிட்டது" என்று பதிவிட்டிருக்கிறார். அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் ஈரான் பெரும் பண நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், தங்களின் கடல் எல்லை வழியே செல்லும் சர்வதேச வணிகக் கப்பல்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலித்து பணத்தைப் பெருக்க ஈரான் திட்டமிட்டு, அதற்காக பெர்சியன் கல்ஃப் ஸ்ட்ரெயிட் அத்தாரிட்டி என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா அண்மையில் தடையும் விதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் ஒரு பகுதி ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குள் வருகிறது. இந்த வர்த்தகப் பாதையை ஈரான் மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கூட்டாகக் கட்டுப்படுத்தப் போவதாகவும், சுங்கக் கட்டண முறையை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஓமன் நாடு பாரம்பரியமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்தாலும், ஈரானின் இந்தத் திட்டத்திற்கு அது மறைமுகமாக உதவினால் ஓமன் மீதும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் பாயும் என அமெரிக்கா தற்போது எச்சரித்துள்ளது.