வாஷிங்டன்: அமெரிக்காவில் விற்கப்படும் இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் புதிய மசோதாவை, அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் அரசு நிறைவேற்றியிருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை வாங்கும் முதல் 5 நாடுகளின் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இதனால் இந்தியா, சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 10 நாடுகள் பாதிக்கப்படும்.
ரஷ்ய எரிவாயுவை 15%க்கும் குறைவாக இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களின் தேவைகளை படிப்படியாக குறைப்பதாக உறுதியளித்தால் அவர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மட்டுமல்லாது ரஷ்யாவின் நிழல் கப்பல் படை மீதான நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான தடைகளை 2031 வரை நீடிப்பது ஆகியவையும் அமெரிக்காவின் புதிய உத்தரவில் அடங்கும். அமெரிக்காவுக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை, ரஷ்யாவை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதுதான். உக்ரைன் போரில் ரஷ்யாவை மண்ணை கவ்வ வைக்க வேண்டும். ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதன் மூலம்தான் பணம் கிடைக்கிறது. இதை வைத்துதான் ஆயுதங்களை வாங்குகிறது. எனவே, கச்சா எண்ணெய் விற்பனையை முடக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று டிரம்ப் நம்புகிறார். அதனால்தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரியை போட்டிருக்கிறார். இந்த வரி சட்டம் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தற்போது டிரம்பின் ஒப்புதலுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. டிரம்ப் ஒப்புதல் கொடுத்தால்.. சட்டமாக அமல்படுத்தப்படும். இதில் இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. அதாவது, இனி வரும் காலங்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டிரம்ப் இதுபோன்ற வரியை போட்டுக்கொள்ளலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம். இதை சிறப்பம்சம் என்று சொல்ல முடியாது.. கட்டுப்பாடு இல்லாத அதிகாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் சட்டத்தை நிறைவேற்றினால்.. இரண்டு விஷயம் நடக்கும். ஒன்று இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்குவதை தவிர்க்கும். இது நடந்தால்.. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும். இப்போவே எரிபொருள் விலை உயர்வால் விலைவாசி எக்குத்தப்பாக எகிறியிருக்கிறது. மீண்டும் விலை உயர்ந்தால் மொத்த பொருளாதாரமும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். ஒருவேளை அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு பணியாமல் ரஷ்யாவுடன் கை கோர்த்தால்.. டிரம்ப் சும்மா இருக்க மாட்டார். 100% வரி நிச்சயம்.. இந்தியாவுக்கு இதன் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்படும். எப்படி இருந்தாலும் இழப்பு நமக்குதான். எனவே இந்தி விஷயத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.