வாஷிங்டன்: இஸ்ரேலை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தடுத்துள்ளார். இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய விமானியை ஹீரோ என்று புகழ்ந்திருக்கிறார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விமானி மிகவும் மோசமான நிலையில் இருந்தார். தற்போது அவர் அப்படித்தான் இருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால், கத்தியால் குத்தப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதிலும், விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியை தடுத்து காக்பிட் கதவை திறந்து உதவிக்காக கூச்சலிடும் அளவுக்கு அவருக்கு சமயோசிதமான யோசனை இருந்தது ஆச்சரியமளிக்கிறது. அவர் ஹீரோதான்.
காக்பிட் கதவு திறக்கப்பட்டவுடன் விமானம் ஓட்டிய அனுபவமே இல்லாத ஒரு இஸ்ரேலிய பயணி காக்பிட்டுக்குள் நுழைந்தார். அவர் கையில் கத்தியுடன் இருந்த சக விமானியை அடித்து தூக்கி எறிந்திருக்கிறார். பின்னர் விமானத்தின் லிவரை பிடித்து மேல் நோக்கி இழுத்து.. விமானம் மேலும் கீழே இறங்காமல் காப்பாற்றியிருக்கிறார். இதை செய்தவர் ஒரு பிளம்பர். விமானத்தை முன்பின் ஓட்டாத ஒருவர் இப்படி செயல்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த பயணி 'ஏர் டிசாஸ்டர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர் என்றும் அதன் மூலமே விமானத்தை எப்படி கையாள்வது என்ற அடிப்படை அறிவை பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையாகவே நான் கேட்ட கதைகளிலேயே இது மிகவும் வியக்கத்தக்க கதை. இருந்தாலும் இந்த தகவல்கள் அனைத்தும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஆரம்பகட்ட சில ஆதாரங்கள் மூலமாக கிடைத்தது. இதை நான் தனிப்பட்ட முறையில் இன்னும் உறுதி செய்யவில்லை" என்று கூறியிருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும் விமானியின் துணிச்சலை வெகுவாக பாராட்டியிருந்தார். தனது x பக்கத்தில், "மிக கடுமையான ஆபத்து நிலவியபோதும், தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காயம் ஏற்பட்டபோதும், மற்றவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசைக்க முடியாத உறுதியும், துணிச்சலும் பாராட்டுக்குரியது. இந்த வீரமிக்க செயல்தான் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி, மிகப்பெரிய விமான பேரழிவை தடுத்துள்ளது. கேப்டனின் இந்த செயலை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைகொள்கிறது. அவர் ஒரு ஹீரோ. விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.