நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்!

  • வாஷிங்டன்: லெபனான் மீதான தாக்குதல் சம்பவத்தில், தனக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும், இதில் நெதன்யாகுவை தான் திட்டியதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல்கள் அதற்கு முட்டுக்கட்டையாக அமைவதால் போன் மூலமாக நெதன்யாகுவை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

    Advertisement

    அண்மையில் 'ஆக்சியோஸ்' செய்தி நிறுவனம், அதிபர் டிரம்ப் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைத் தொலைபேசியில் அழைத்து மிகக் கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து 'பாட் போர்ஸ் ஒன்' பாட்காஸ்ட் நேர்காணலில் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், “ஆமாம், நான் நெதன்யாகுவை 'fing crazy' (முற்றிலும் பைத்தியக்காரன்) என்று திட்டியது உண்மைதான்” என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    இருப்பினும், தான் அவர் மீது கோபமாக இல்லை என்றும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தேவையற்ற தாக்குதல்கள் தனக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியதால் அப்படிப் பேசியதாகவும் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    அந்தப் போன் காலில் டிரம்ப் நெதன்யாகுவிடம் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நான் மட்டும் இல்லையென்றால் நீ இந்நேரம் (ஊழல் வழக்குகளில் சிக்கி) சிறையில் இருந்திருப்பாய். நான் தான் உன்னைக் காப்பாற்றி வருகிறேன். ஆனால் உன்னுடைய இந்த செயலால் இப்போது உலகமே உன்னை வெறுக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலை வெறுக்கத் தொடங்கிவிட்டது. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கோபமாக பேசியிருக்கிறார்.

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வந்த போர் பதற்றத்தை தணிக்க, ஏப்ரல் 8 முதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ளது. தற்போது அதை நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாற்றும் இறுதிப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

    Advertisement

    ஆனால், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான போரையும் நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் முழுமையான அமைதி உடன்படிக்கை செய்ய முடியும். இல்லையென்றால் பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

    டிரம்ப் லெபனான் எல்லையில் அமைதியைக் கொண்டுவர முயலும் வேளையில், நெதன்யாகு லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழித் தாக்குதலை நடத்த உத்தரவிட்டது தான் டிரம்பின் கடுமையான கோபத்திற்கு முக்கியக் காரணமாகும்.

    டிரம்பின் இந்த கடுமையான வார்த்தைகளுக்கு பிறகு, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த பெரிய அளவிலான தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Trump has stated that a verbal altercation took place between himself and Israeli Prime Minister Benjamin Netanyahu regarding the attack on Lebanon, and that he verbally lashed out at Netanyahu during the exchange.