வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மிரட்டல் வெடித்துள்ள நிலையில், டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் அவர்கள் மகன் பாரன் டிரம்பை குறிவைத்து அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மெலானியாவை கொலை செய்வது எப்படி என்று வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மெலானியா குறித்த பல தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அதில் மெலானியாவை கொலை செய்யுமாறு ஈரான் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்ததால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது. இப்போது அமெரிக்கா சற்று தாக்குதலை நிறுத்தினாலும் கூட பதற்றம் ஒரு சதவிகிதம் கூட குறையவில்லை. இதற்கிடையே டிரம்பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொல்லப்போவதாக சொல்லி ஈரான் தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரம்மாண்ட விளம்பர பலகை ஒன்று நிறுவப்பட்டது. அதில் அமெரிக்க தேசிய கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகளினில் டிரம்ப், மெலானியா மற்றும் அவரது குடும்பத்தினரின் படங்கள் இருந்தன. மேலும், ரத்தத்திற்கு ரத்தம் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இந்தச் சூழலில் தான் டிரம்பின் மனைவி மெலானியா மற்றும் அவர்களின் மகன் பாரன் டிரம்ப்பை கொல்ல போவதாக சொல்லி ஈரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மெலானியாவை கொலை செய்வது எப்படி என்று வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மெலானியாவின் ஷாப்பிங் தொடங்கி பல தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அதில் ஈரான் ஆதரவாளர்கள் முன்வந்து மெலானியாவை கொல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அந்த வீடியோவில் மெலானியா டிரம்ப் பாதுகாப்பு பாதுகாப்பு கான்வாயுடன் செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. நியூயார்க் நகரில் உள்ள ஆடம்பர கடைகளுக்கு மெலானியா செல்வது போல வீடியோவில் இருக்கிறது. மேலும், மெலானியா அடிக்கடி ஷாப்பிங் செல்லும் கடைகளை குறிப்பிடும் ஈரான், தங்கள் ஆதரவாளர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க இந்த இடங்களே சரியாக இருக்கும் என்றும் தாக்குதலுக்கு அழைப்பு விடுப்பது போல பேசியுள்ளது. மெலானியா வாங்கும் ஆடைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கெமிக்கல் விஷத்தை மிக்ஸ் செய்வது போன்ற விஷயங்களும் அந்த வீடியோவில் இருக்கிறது. அத்தோடு நிற்காமல் வீடியோவின் இறுதியில், டிரம்பின் இளைய மகன் பாரன் டிரம்பையும் குறிவைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், "இது தொடக்கம் மட்டுமே... பாரன் டிரம்ப், உனக்காக நாங்கல் வருகிறோம்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. டிரம்பின் குடும்பத்தை தொடர்ந்து ஈரான் மிரட்டி வந்தாலும் கூட இந்தளவுக்கு பல தனிப்பட்ட தகவல்களை கொண்ட வீடியோவை ஈரான் வெளியிடுவது இதுவே முதல்முறை. மேலும், நேரடியாக மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. ஈரான் தன்னை கொலை செய்ய முயல்வதாக டிரம்பும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் பேசிய டிரமப், "நீண்ட நாட்களாகவே என்னை கொல்ல ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஒருவேளை ஈரான் என்னை எதாவது செய்தால்.. அதற்கு அமெரிக்கா மிகக் கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கும். அதற்கான தெளிவான உத்தரவை நான் ஏற்கனவே பிறப்பித்துவிட்டேன்" என்று டிரம்ப் கூறியிருந்தார். மத்திய கிழக்கை பொறுத்தவரை இன்னும் அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும், ஈரானின் முக்கிய ராணுவ இலங்களில் கிட்டத்தட்ட 80%ஐ அமெரிக்கா அழித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே இப்போது அமெரிக்கா தாக்குதலை நடத்தாமல் அமைதியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தைகான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.ஈரான் கொலை மிரட்டல்
பகீர் தகவல்கள்
டிரம்ப் பதிலடி
மத்திய கிழக்கு