நடுவானில் மோதிக்கொண்ட 2 போர் விமானங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய விமானிகள்! ஷாக்!

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் போது, இரண்டு அதிநவீன ராணுவ ஜெட் விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் 4 விமானிகளும் பாதுகாப்பாக உயிர் தப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    இந்த பகுதியில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விமான கண்காட்சி நடைபெறுகிறது. இருப்பினும் இக்கண்காட்சி விபத்தில் முடிவடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    என்ன நடந்தது?

    இடாஹோவில் உள்ள 'மவுண்டன் ஹோம்' விமானப்படை தளத்திற்கு வெளியே 3 கி.மீ தொலைவில், நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு நடைபெற்ற 'கன்ஃபைட்டர் ஸ்கைஸ் ஏர் ஷோ' என்ற இரண்டு நாள் விமானக் கண்காட்சியின் போது, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு E/A-18G க்ரௌலர் ரக மின்னணு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.

    விமானங்கள் மோதிக்கொண்ட உடன், அதிலிருந்த 4 படைவீரர்களும் தங்களின் 'எஜெக்ஷன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிப் பாராசூட் மூலம் தரையிறங்கினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    Advertisement

    விசாரணை தொடக்கம்

    விபத்து நடந்த உடனேயே 'மவுண்டன் ஹோம்' விமானப்படை தளம் முற்றிலும் மூடப்பட்டு தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்து குறித்து அமெரிக்க பசிபிக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் அமீலியா உமயம் கூறுகையில், விபத்தில் சிக்கிய விமானங்கள் வாஷிங்டனின் விட்பே தீவில் உள்ள 129-வது எலக்ட்ரானிக் அட்டாக் ஸ்குவாட்ரனைச் சேர்ந்தவை என்றும், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    8 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சோகம்

    இந்த மவுண்டன் ஹோம் விமானத்தளத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட முதல் வான்வழி கண்காட்சி இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் போதும் ஒரு 'ஹேங் கிளைடர்' பைலட் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விபத்து குறித்து உள்ளூர் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உடனடியாகக் கூடுதல் விபரங்களை வெளியிடவில்லை.

    Advertisement

    காரணம் என்ன?

    பொதுவாக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் அது அடுத்த நொடியே வெடித்து சிதறும். ஆனால், இந்த விபத்தில் இப்படி நடக்கவில்லை. இரண்டு விமானங்களும் ஒன்றாக சுழன்று தரை நோக்கி வேகமாக வந்திருக்கிறது. எனவே, சுதாரித்துக்கொண்ட விமானிகள் சட்டென விமானத்திலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

    விமான சாகச நிகழ்ச்சிகளில் இரண்டு விமானங்கள் நெருக்கமாக பறப்பதை 'ரெண்டேவூ மேனியூவர்' என்று சொல்வார்கள். அதாவது இரண்டு விமானங்கள் ஒரு புள்ளியில் நெருக்கமாக சந்தித்து, பின்னர் நேர் கோட்டில் பயணிக்க தொடங்கும்.

    இப்படி செய்யும்போது இரண்டு விமானங்களுக்கு இடையில் மிகக்குறைந்த அளவே இடைவெளி இருக்கும். இதில் ஒரு சிறிய தவறு நடந்தால் கூட விபத்து கன்பார்ம். அப்படித்தான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    An incident in which two state-of-the-art military jets collided mid-air during an air show at an Air Force base in the U.S. state of Idaho has caused shock. All four pilots involved in the incident survived safely.