வாஷிங்டன்: உலகின் முன்னணி ஏஐ நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தை உளவு பார்க்க அதில் ரகசியமாக ரெக்கார்டிங் கருவியை வைத்த சவுதி நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிக முக்கியமான மீட்டிங்குகளை ரகசியமாக கேட்கும் வகையில் அவர் அந்த கருவியை பொருத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் அசுர வேகத்தில் ஏஐ வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த துறைகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. இப்போது ஏஐ துறைகளில் டாப் இடங்களில் இந்த நிறுவனங்களே உள்ளன.
இதற்கிடையே அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஓபன் ஏஐ அலுவலகத்தில் ரகசியமாக ரெக்கார்டிங் கருவியை பொருத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, எஃப்.பி.ஐ.யிடம் ஓபன் ஏஐ நிறுவனம் புகாரளித்துள்ளது. கடந்த மாத இறுதியில் தான் ஓபன் ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு குழுவினர் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அதிநவீன ரெக்கார்டிங் கருவியை கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்துல்ரஹ்மான் அல்ஃபோசான் (35) என்ற பொறியாளர் அக்டோபர் 9ம் தேதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவர் ஜூலை 2025 முதல் ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விசாரணை முடிந்து முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அல்ஃபோசான் ஒரு யுஎஸ்பி சாதனத்தை டாய்லெட் பேப்பரில் சுற்றி, நிர்வாக கூட்டங்கள் நடைபெறும் ரூமில் இருந்த டிவிக்குள் மறைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த ரூமிற்கு அருகில் அவர் பலமுறை நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த ரூமில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு அனுமதி இல்லாத போதிலும் அவர் அந்த பக்கம் அடிக்கடி சுற்றி வந்திருக்கிறார். அல்ஃபோசானின் மனைவியின் சாட்பாட் கணக்கில், தூரத்தில் இருந்து ரெக்கார்ட் செய்வது எப்படி? மெமரி கார்டை என்கிரிப்ட் செய்வது எப்படி போன்ற கேள்விகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமான இன்னொரு பேக்கில் மற்றொரு கண்காணிப்பு கருவியை பாதுகாப்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சாதனத்தின் மூலம் ஏதேனும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டனவா என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், அந்த ஊழியர் ஓபன் ஏஐ மாடல்களின் முக்கிய டேட்டா, சோர்ஸ் கோட் அல்லது வாடிக்கையாளர் தகவல்களை திருடியதற்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. அதேநேரம் ஏஐ மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டன் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி பிறரின் உரையாடல்களை பதிவு செய்ய முயன்றதாக அல்ஃபோசான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.5 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். அக்டோபர் 19ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளாார். முன்னதாக 2022ல் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் அஹ்மத் அபூஅம்மாவ் என்பவர் ட்விட்டரில் சவுதி அரசை விமர்சிப்பவர்களை அடையாளம் காண உதவியதாக சொல்லி வழக்கு தொடரப்பட்டது.. தற்போது ஓபன் ஏஔ ஊழியரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேநேரம் இந்த ஓபன் ஏஐ ஊழியருக்கு சவுதி அரசுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.ஓபன் ஏஐ
முதற்கட்ட அறிக்கை
அமெரிக்க உளவுத்துறை
முதல்முறை இல்லை