17 முறை கத்தியால் குத்தப்பட்ட சீக்கியர்! காரணம் டிரம்ப் அரசு போட்ட போஸ்ட்? அமெரிக்காவில் கொடூரம்

  • வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு இன ரீதியாக வெறுப்புகளை பரப்பும் போக்கு அதிகரித்துள்ளது. அப்படி தான் டிரம்ப் அரசு தரப்பில் இருந்தே சீக்கியர்கள் மீது வெறுப்பை பரப்பும் கருத்துகள் பதிவிடப்பட்டது. அந்த பதிவு போடப்பட்ட சில நாட்களிலேயே சீக்கியர் ஒருவர் 17 முறை கத்தியால் கொடூரமாக குத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    அமெரிக்காவில் சாலையோர கழிவறைக்கு சென்ற சீக்கிய டிரக் டிரைவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 45 வயதான ஆண்ட்ரூ கிரிஸ் ப்ஸ்டாக் என்பவர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

    Advertisement

    என்ன நடந்தது!

    இதில் படுகாயமடைந்த டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. சிங் என்றே அவர் தன்னை ஊடகங்களில் குறிப்பிடுகிறார். மருத்துவமனையில் இருந்து அமெரிக்க செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த தாக்குதலால் தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தன்னை ஏன் குறிவைத்து தாக்கினர் என்பது புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பென்சில்வேனியா நோக்கி டிரக் ஓட்டிச் சென்ற சிங், தெற்கு வயோமிங் பகுதியில் உள்ள சாலையோர ஓய்விடத்தில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அங்குள்ள கழிவறையை பயன்படுத்த அவர் உள்ளே சென்றபோது, தனக்கு பின்னால் ஒரு நபர் வருவதை கவனித்துள்ளார். ஆனால், அந்த நபர் தன்னை பின்தொடர்வதை சிங் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    Advertisement

    கழிவறை

    ஆனால், கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த நபர் திடீரென சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது. முதலில் சிங்கை கடுமையாக தாக்கிய அந்த நபர், அத்தோடு நிற்காமல் கத்தியை எடுத்து சிங்கை பலமுறை குத்தியுள்ளார். அவரது கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. மார்பு மற்றும் விலா எலும்பு பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்ற பிறகு, படுகாயமடைந்த சிங் எப்படியோ கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில், நடைபாதையில் அவர் சரிந்து விழுந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர் சிங்கின் நிலையைப் பார்த்து உடனடியாக அவருக்கு உதவியுள்ளனர். அவரது காயங்களுக்கு முதலுதவி செய்ததுடன், அவசர மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    நன்றி

    இந்த சம்பவத்தை நினைவு கூறும் சிங், தனக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்தார்கள் என்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் விரைவான உதவியே தனது உயிரை காப்பாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். புதன்கிழமை இரவு வரை சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது உடலில் ஏற்பட்ட பல்வேறு கத்திக்குத்து காயங்களுடன், மார்பு மற்றும் விலா எலும்பு பகுதிகளிலும் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக 45 வயதான ஆண்ட்ரூ கிரிஸ் ப்ஸ்டாக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், சிங்கை தாக்கியதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. தாக்குதலுக்கான நோக்கம் குறித்த எந்த தகவலும் இல்லை.

    Advertisement

    டிரம்ப் நிர்வாகம்

    இந்த தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சர்ச்சைக்குரிய பதிவை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த போஸ்ட்டில் சீக்கிய டிரக் டிரைவரை சித்தரிக்கும் படம் ஒன்றுடன், சில இனவெறி கருத்துகள் இடம்பெற்றிருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அது டெலிட் செய்யப்பட்டது.

    இந்த சூழலில் சிங் மீதான தாக்குதல் குறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ராஜா கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சீக்கிய மற்றும் தெற்காசிய அமெரிக்கர்களை குறிவைக்கும் வெறுப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், தாக்குதலுக்கு காரணமானவருக்கு சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    கலிபோர்னியாவின் 4-வது காங்கிரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி மைக் தாம்சனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sikh truck driver in Wyoming was allegedly attacked and stabbed 17 times at a roadside rest area while traveling toward Pennsylvania(அமெரிக்காவில் சீக்கிய ஊழியர்கள் மீது கொடூர தாக்குதல்) Truck Driver Stabbed in USA latest news in tamil.