அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு

  • வாஷிங்டன்: கியூபா மற்றும் ஈரானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். கியூபாவில் 6.1 ரிக்டர் மற்றும் ஈரானில் 5.0 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான சேதமோ உயிரிழப்போ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. கியூபாவில் கடந்த 150 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை என கூறப்படுகிறது.

    Advertisement

    பாதுகாப்பு கருதி முன்னதாகவே பல வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கங்கள் குறித்து உன்னிப்பான கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    Advertisement


    கியூபாவில் நிலநடுக்கம்

    கியூபாவின் வடமேற்கு கடற்கரை பகுதியில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 26 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி, மேற்கு கியூபாவின் மண்டுவா நகரத்திலிருந்து சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1880-ஆம் ஆண்டுக்கு பிறகு இப்பகுதியில் இவ்வளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகவில்லை. அதாவது கடந்த 150 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை என்றும் கூறப்படுகிறது.

    Advertisement

    நிலநடுக்கத்தின் அதிர்வு கியூபா மட்டுமின்றி, அமெரிக்காவின் புளோரிடா, மெக்சிகோவின் யூகடான் தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. மெக்சிகோவின் கன்குன் பகுதியில் முன்னெச்சரிக்கையாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதி அதிகாரிகள் அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வெளியேற்றினர். கியூபாவின் உள்கட்டமைப்பு பலவீனமாக இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    ஈரானில் நில அதிர்வு

    ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5. 0 ஆக பதிவானது. சர்காஸ் பகுதியில் 22 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டிருந்தது. ஈரானிய அரசு ஊடகங்கள் இதை உறுதி செய்துள்ளன. தற்போது வரை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    Advertisement

    ஈரான் நிலநடுக்க அபாயம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் இருப்பிடம் பல முக்கிய நிலப்பிளவு கோடுகளில் அமைந்துள்ளன. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் தான். நிலநடுக்கத்திற்கு பின்னர் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Earthquake: A 6.1-magnitude earthquake struck off Cuba's northwest coast, while a 5.0-magnitude tremor hit Iran's Hormozgan province. The quakes were felt across nearby regions, prompting panic among residents, though authorities reported no immediate casualties or significant damage.